பாவைக்கதை 2

Moderator: Rajalakshmi N

Post Reply
Rajalakshmi N
Moderators
Posts: 4
Joined: Tue May 26, 2020 12:20 pm
Has thanked: 1 time
Been thanked: 2 times

பாவைக்கதை 2

Post by Rajalakshmi N »

பாவைக்கதை 2

மிகவும் பரபரப்புடன் இருந்தாள் அவள். மிகவும் நேர்த்தியானவள். எப்போதும் பிறருக்காகவே யோசிப்பவள்.

தன்நலமில்லாத சேவை மனதுடன் இருப்பதாலேயே மருத்துவத்துறையை தேர்ந்தெடுத்தாள்.

பணத்தின் பின்னால் ஓடாமல் தன்னால் இயன்ற உதவிகளை, தன்னால் இயலும் மருத்துவ சேவையை ஏழை எளிய மக்களுக்குக் கொடுப்பதே அவளது லட்சியம்.

அதனாலேயே அரசு மருத்துவராக பணியில் சேர்ந்தவள், துணிந்து இப்பெரும் நோய்த் தொற்று காலத்தில் முன்களப் பணியாளராக முன்வந்து தானாகவே கோவிட்19 வார்டில் பணி புரிகிறாள்.

அத்தோடு இந்நோயைப் பற்றி, அதன் அபாயம் பற்றி முதன்முதலில் தன் முகநூல் பக்கத்தின் வாயிலாக எச்சரிக்கை விட ஆரம்பித்தவளும் அவளே.

எங்கோ ஓர் நாட்டின் வியாதி நம் நாட்டில் எப்படி பரவும் என பலரின் கேலியையும் கிண்டலையும் பொருட்படுத்தாமல் அன்றிலிருந்து தொடர்ந்து தொற்று நோய் குறித்த தன் விழிப்புணர்வு பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறாள்.

அதோ அந்த வாலிபருக்கு சுவாசக் கருவி பொறுத்தி அவரது உயிரைக் காப்பாற்ற, தான் போராடுகிறாளே அவளே தான்.

பல நோயாளிகள் அவர்களது வலி, தனிமைப்படுத்தலின் மன அழுத்தம் என எல்லாவற்றையும் எதிர் கொள்கிறாள்.

அதனாலேயே, உடனுக்குடன் தனக்குக் கிடைக்கும் குறைந்த நேரத்திலும் தன் மருத்துவ அறிவுக்கு புலப்பட்டு, ஆய்வுக்கட்டுரைகள் ஆராய்ந்து, சர்வதேச நிகழ்வுகளின் தரவுகளைக் கையாண்டு நம் மக்களுக்கு தன்னால் ஆன விழிப்புணர்வை விதைக்கிறாள்.

இப்பெருந்தொற்றுக் காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது? என அவளிடம் பேட்டி எடுக்கிறார் முன்னணி செய்தி சேனலின் நிருபர்.

அவள் பதிலளிக்கிறாள்.. "தினமும் இரு வேளை குளிக்கவேண்டும், கைகளை அடிக்கடி சோப்பினால் இருபது வினாடிகளுக்கு சுத்தம் செய்ய வேண்டும், தனி நபர் இடைவெளி குறைந்தது 6 அடி கடைபிடிக்க வேண்டும், அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்லும் போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். நாம் போராட வேண்டியது நோயோடு தான் நோயாளிகளோடு அல்ல. இயன்ற அளவுக்கு இயலாதவர்களுக்கு உதவுங்கள்."

செய்யக்கூடாதது என்னென்ன என சொல்லுங்கள் மேடம்? எனக் கேட்கிறார் நிரூபர்..

"நோய் பாதிப்புக்குள்ளாகி தமக்கே தெரியாமல் நோய் பரப்பும் ஏஜெண்டாக மாறிய மனிதர்களை கொலைக் குற்றவாளி போல பார்க்காதீர்கள், முன் களப் பணியாளர்களான மருத்துவ, சுகாதார, உணவுத் துறை மக்களுக்கு மதிப்பு கொடுங்கள், முடிந்த வரை வீட்டிலேயே இருங்கள், வீட்டிலிருக்கும் சமயத்தில் எங்கேனும் வெட்டி வம்பு கிடைக்குமா என அல்லாடாமல் அமைதியாய் குடும்பத்தினரோடு செலவழியுங்கள், இல்லையேல் புத்தகங்களை வாசியுங்கள், உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை உட்கொள்ளுங்கள், துரித, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிருங்கள், மன ஆரோக்கியத்தை பேணுங்கள்" என்கிறாள்.

அவ்வளவு தானா மேடம்?

இன்னும் இருக்கிறது ஆனால், அடிப்படை இவ்வளவு தான் இத்தோடு சேர்த்து நோயோடு வாழ நாம் பழகியாக வேண்டும். ஏனெனில் நுண்கிருமிகளே இவ்வுலகை காலங்காலமாக ஆட்சி செய்கின்றன என புன்னகைக்கிறாள்.

அவள் புன்னகையூடான கம்பீரத்தில், நவீன பெண்ணின் தெளிவில் சிலிர்த்து அவள் சொல்வதைக் கேட்க தயாராகிறது நாடு.

ஏனெனில் அவள் தன்னலமில்லாதவள். பிறருக்காக துடிக்கும் தாயுள்ளம் கொண்டவள். நவீன பெண்களின் பிரதியானவள்.
..

திருப்பாவை-2

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்    
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
..


பொருள்:

இவ்வுலகில் வாழும் மக்களாகிய நாம் பாவை நோன்பை கடைப்பிடித்து இறைவனின் அருளைப் பெருவோம் எனும் நாச்சியார், நோன்பின் போது செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை பற்றிக் கூறுகிறார்.

கிரிசைகள் - கடைபிடிக்க வேண்டிய நியதிகள்

பாற்கடலுள் பையத் துயின்ற பரமனாம்.. ஏன்?

பைய என்பது இன்னும் எங்கள் தென் தமிழகத்தில் புழக்கத்திலிருக்கும் வார்த்தை. பாத்து பைய போ என இன்றும் சொல்கிறார்கள். பைய என்றால் மெதுவாக என பொருள்.

பரமன் ஏன் பைய துயில வேண்டும்? ஏனெனில் காக்கும் கடவுளான மகாவிஷ்ணு எப்போதும் இந்த ப்ரபஞ்சத்தின் மீது விழிப்போடு இருக்கிறார். எப்போது தன் பக்தன் அழைத்தாலும் ஓடோடிப் போய் உதவ ஆயத்தமாக இருக்கிறார். ஆகையால் ஆழ் நித்திரைக்குச் செல்லாமல் கைக்குழந்தை வைத்திருக்கும் தாயைப் போல பைய துயில்கிறார்.

அத்தகைய பரமனின் அடி பாடி, நெய் பால் போன்றவற்றை உட்கொள்ள மாட்டோம். ஏனாம்?

ஏனெனில் ஆண்டாள் தம்மை ஆயர்பாடி சிறுமியாக கற்பனை செய்து கொள்கிறார். ஆயர்களின் பிரதான உற்பத்தி பொருளான பாலும், வெண்ணையும், நெய்யும் தானே அவர்களது முக்கிய உணவாக இருக்க இயலும்? ஆகையால் தம் பிரதான உணவையே தவிர்ப்பதாக சொல்கிறாள்.

அதிகாலையிலேயே நீராடிடுவோம், கண் மை, பூ போன்ற அலங்காரங்களைச் செய்து கொள்ளாமல் என்னேரமும் இறை சிந்தனையில் இருப்போம்.

பெரியவர்கள் செய்யக்கூடாதென சொல்லிய தீயவைகளைச் செய்ய மாட்டோம். ஒருவரைப் பற்றி ஒருவரிடம் புறம் கூட மாட்டோம். தானங்கள் கொடுப்போம், துறவிகளுக்கு போதும் போதுமெனும் அளவுக்கு பிச்சை இடுவோம்.

இவற்றையெல்லாம் செய்து நாம் பாவை நோன்பைக் கடைபிடிப்போம் வாருங்கள் என அழைக்கிறார்.

.....

மையப் பொருள்: திவ்யப் பிரபந்தம் என்பது ஒரு கடல். அதில் ஒவ்வொரு பாசுரமும் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் உங்களது பக்திக்கேற்ப, இறை ஞானத்திற்கேற்ப வெவ்வேறு விதமாய் பல பொருள் தரக்கூடியவை.

'பைய'த்துயின்றான் என்பதை வைத்தே.. பக்கம் பக்கமாய் விவரிக்கும் ஆச்சார்யர்களும், ஒரே வரியில் இது தான் விளக்கமெனக் கடக்கும் மக்களுமாக ஆளுக்கு ஆள் அவரவர் ஞானத்தைப் பொறுத்து பாசுரங்களின் பொருள், மையக் கருத்துகள் மாறும்.

நான் இங்கே நேரடியாக அதே சூழலை அப்படியே பொறுத்தி ஒவ்வொரு வரிக்குமான பொருளாக கதைகளை அமைக்கவில்லை.

இப்பாசுரத்தில் மையக் கருத்தாக நான் என் சிற்றறிவிற்கு உட்பட்டு எடுத்துக் கொள்வது, குறிப்பிட்ட ஓர் காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என சிலதைப் பட்டியலிட்டு, உலகோருக்கு வழிகாட்டுகிறாள் தாயுள்ளம் கொண்ட ஒருவள்.

இம்மையக் கருத்தை இன்றைய சூழலோடு பொறுத்தியே இக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

சிலர் கேட்டுக் கொண்டதால் பாசுரத்திற்கான விளக்கத்தை எனக்குப் புரிந்த அளவில் கொடுக்கிறேன்.

இதை விளையாட்டாகவோ, நையாண்டியாகவோ நான் கையாளவில்லை. அதீத எச்சரிக்கையோடும், பக்தியோடும் எனதன்னையின் மீதான அன்போடும் எழுதுகிறேன்.

நியாயமான கருத்தியல் ரீதியிலான தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். எனக்கும் அது தவறென தோன்றினால் திருத்திக் கொள்கிறேன்.


சமர்ப்பணம்:
.....................
பெருந்தொற்று உருவான காலம் தொட்டு கொஞ்சமும் சுயநலமில்லாமல், முகநூல் மூலமாக பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அத்தனை மருத்துவர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம்.

பிறர் உயிரைத் தம்முயிராய் பேணத் துடிப்பதால் நீங்களும் இறைவன் தான்!

நன்றி



Post Reply

Return to “பாவை கதைகள்”