Page 1 of 1

தங்கச்சி

Posted: Sat Jul 04, 2020 5:48 pm
by Bhanurathy Thurairajasingam
நான்கு வருட இடைவெளியில்
எந்தன் தாயவள் பெற்றெடுத்த
குட்டி ராட்சசியும்  இவள் தான்

விடிந்ததில் இருந்து இரவாகும்
நேரம் வரை என்னை ஆட்டிப்
படைக்கும் மந்திரக்கோலும்  இவள் தான்

தமக்கை என்ற போதிலும்
என்னைத் தங்கை போலவே
நடத்தும் குறும்புக்காரியும்  இவள் தான்

தட்டிக் கொடுத்துப் பேசுகின்ற போது
நான் ஆசையுடன் அணைத்துக்
கொள்ளும் தோழியும் இவள் தான்

அதே என்னைத் தட்டி விட்டுப் பேசும்
போது நான் கோபத்துடன் அடிக்கும் அன்பான எதிரியும் இவள் தான்

எனக்காக வக்காளத்து வாங்கிப்
பேச ஓடி வருகின்ற
சண்டைக் கோழியும் இவள் தான்

அதே அம்மா அடிக்கின்ற போது ஓடி
ஒழிந்து வேடிக்கை பார்க்கின்ற
களவாணியும் இவள் தான்

முடிவெடுக்க முடியாமல் நான் விழிக்கின்ற வேளையில் சரியான அறிவுரை
கூறும் ஆசானும் இவள் தான்

நான் விரும்பும் எனது எழுத்துக்குக் கிடைத்த இரண்டாவது வாசகியும்
இவள் தான்

என் பேனாவின் முனையில் ஊற்றெடுக்கும் கவிதைகளுக்குக் கிடைத்த
இரண்டாவது இரசிகையும் இவள் தான்

துவண்ட நேரங்களில் தோள் தொட்டு நானிருக்கிறேன் உனக்கு என்ற தைரியம் கொடுத்தவளும் இவள் தான்...

உறவுகளுக்கு முன்பாக வாய் இருந்தும் ஊமையாக இருக்கும் எனக்காக வெளிப்படும் வார்த்தைகளும் இவள் தான்...

எதையுமே மறைக்காமல் எழுதித் தள்ளுகின்ற என் நாட்குறிப்பும்
இவளே தான்...

அன்னையும் தந்தையுமாக என்
கையில் கொடுத்த குட்டித்
தேவதையும் இவளே தான்...

                                            ✒பானுரதி✒