உன்மத்தம் கொண்டேனடி உன்னால் 9

Moderator: Madhumathi Bharath

Post Reply
User avatar
Madhumathi Bharath
Site Admin
Posts: 124
Joined: Mon May 11, 2020 9:11 am
Location: Tamilnadu
Has thanked: 117 times
Been thanked: 31 times

உன்மத்தம் கொண்டேனடி உன்னால் 9

Post by Madhumathi Bharath »

அத்தியாயம் 9

விடிந்ததும் குளித்து முடித்து மகேசன் தன்னுடைய ஹோட்டலுக்கு கிளம்பி சென்று விட கற்பகம் தோட்டத்தில் காய்கறிகளை பறித்துக் கொண்டு இருந்தார். அழைப்பு மணி விடாமல் ஒலிக்க... ‘யார் இந்த நேரத்தில்?’ என்ற யோசனையுடன் கதவை திறந்தவர் நிச்சயமாக அந்த நேரத்தில் அவரது மாமியாரை மட்டும் அங்கே எதிர்பார்க்கவில்லை என்பது தான் நிஜம்.

‘கிட்டத்தட்ட பல வருஷங்களாக இருக்கிறோமா இல்லையா என்பதைப் பற்றிக் கூட கவலைப்படாத மாமியார் இப்படி விடிந்தும் விடியாத நேரத்தில் ஏன் வந்து இருக்கிறார்?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே கற்பகத்தை இடித்து தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தார் அவரது மாமியார் கனகம்.

“மாடு மாதிரி வழியை அடைத்துக் கொண்டு நிற்காதே.. அப்பப்பா.. என்ன வெயில்.. போய் சட்டுன்னு ஒரு காபி போட்டு எடுத்துட்டு வா... தண்ணி கலக்காத பாலில் போட்டு எடுத்துட்டு வா” என்று அதிகாரமாக சொன்னவர் அங்கிருந்த சோபாவில் விச்ராந்தையாக கால் நீட்டி அமர்ந்து கொள்ள கற்பகத்துக்கு ஒரு நொடி மூளை குழம்பிப் போனது.

வந்து இருப்பது மகேசனின் தாயார். என்ன தான் ஒரு காலத்தில் அவர் தனக்கு ஆயிரம் கொடுமைகள் செய்து இருந்தாலும் இப்பொழுது வீடு தேடி வந்து இருப்பவரிடம் கடுமையாக நடந்து கொள்ள அவர் விரும்பவில்லை. அப்படி அவர் செய்தால் மகேசனின் மனம் வாடுமே என்று எண்ணி தயங்கியது தான் முக்கியமான காரணம். ஒன்றுமே பேசாமல் அமைதியாக கிச்சனுக்குள் நுழைந்தவர் காபியை போட்டு அவரிடம் நீட்ட... கற்பகத்தின் முகத்தைக் கூட பார்க்காமல் காபியை வாங்கிக் குடித்த கனகம் எழுந்து வீட்டை கண்களால் அளவிட்டபடியே வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டே மாடிப்பகுதிக்கு நகர்ந்தார்..

மாமியார் மாடிக்கு செல்லவும், அவசர அவசரமாக தொலைபேசியை எடுத்தவர் கடை வியாபாரத்தில் பிசியாக இருந்த மகேசனை அழைத்து விவரத்தை சொல்லிவிட... அடுத்த சில நிமிடங்களில் மகேசன் வீட்டிற்கு வந்து விட்டார்.

வீட்டிற்கு வரும் பொழுதே கடுமையான கோபத்துடன் தான் வந்தார். அந்த வீட்டை விட்டு வெளியேறுமுன் தாயார் நடந்து கொண்ட விதம் அத்தனையும் கண் முன்னால் வந்து போக... அதே கோபத்துடன் வீட்டுக்குள் நுழைந்தவரை பேச விடாமல் கதறி அழுதபடி தோள் சாய்ந்து கொண்டார் கனகம்.

“ஏன்டா.. ஏதோ கோபத்தில் போற.. கொஞ்ச நாள் கழிச்சு திரும்பி வருவன்னு நினைச்சா.. இப்படியா அம்மாவை மறந்துட்டு இருப்ப. இதுக்குத்தான் அப்பவே பெரியவங்க சொன்னாங்க.. பெத்த மனம் பித்து... பிள்ளை மனம் கல்லுன்னு.. இதுவே உன்னைப் பெத்த அம்மாவா இருந்தா இப்படி இருப்பியா? ஆயிரம் தான் இருந்தாலும் நான் உன்னை வளர்த்தவ தானே” என்று கதறி அழ மகேசனின் கோபம் காற்றில் கரைந்த கற்பூரமாய் மாறியது. தன்னுடைய கோபத்தை தள்ளி வைத்து விட்டு அன்னையை தேற்ற வேண்டிய நிலைக்கு ஆளானார்.

ஒருவாறாக அழுது ஓய்ந்தவர் மகனின் கையை பிடித்து இழுத்து சென்று சேரில் தான் அமர்ந்து கொண்டு மகனையும் அருகில் அமர வைத்தவர் மெல்ல பேச்செடுத்தார்.

“இத்தனை வருஷம் உன்னை விட்டு பிரிஞ்சு இருந்துட்டேன் மகேசா... இன்னும் கொஞ்ச நாள் தான் எனக்கு ஆயுசு.. சாகுற வரை உன் பக்கத்துலயே இருக்கணும்னு அம்மாவுக்கு ஆசையா இருக்குப்பா... இருக்கட்டுமா” என்று மகனின் தாடையைப் பிடித்து கேட்க.. மகேசனின் மனம் கனத்துப்போனது.

கனகம் அவரை பெற்ற தாயாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தன்னுடைய தந்தையின் மனைவி எனும் பொழுது அந்த ஸ்தானத்திற்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டியது தன்னுடைய கடமை என்பதை உணர்ந்தார். தன்னுடன் இருக்க வேண்டும் என்று கனகம் விரும்புவதை எப்படி வேண்டாம் என்று மறுப்பது என்று நினைத்தவராய் அமைதியாக இருக்க.. அதையே சம்மதமாக எடுத்துக் கொண்டு கனகம் தொடர்ந்து பேசினார்.

“என்னால மாடி எல்லாம் ஏறி இறங்க முடியாது மகேசா.. அதனால கீழே இருக்கிற ரூமை நான் எடுத்துக்கிறேன்.. அதுல தான் ஏசி இருக்கு... வயசான காலம் பார்... வெக்கையை தாங்க முடிவதில்லை என்று சொன்னவர் மகன், மருமகள் இருவரும் செய்வதறியாது உறைந்து நிற்கும் பொழுதே அறைக்குள் சென்று கட்டிலில் படுத்துக் கொள்ள மகேசன் மௌனமாக கற்பகத்தை ஏறிட்டு பார்த்தார். கணவனின் சங்கடம் நிறைந்த பார்வை அவரது மனதை உரைத்து விட எதுவும் பேசாமல் ஆறுதலாக புன்னகைத்தபடி அவருக்கு அருகில் சென்று தோளை லேசாக அழுத்தினார்.

“வியாபார நேரத்தில் போன் செஞ்சு தொந்தரவு செஞ்சிட்டேனா? வெயிலில் வந்து இருக்கீங்களே.. கொஞ்சம் மோர் குடிக்கறீங்களா?” என்று இதமாக கேட்க.. மகேசன் பரிதவிப்புடன் கற்பகத்தின் கைகளைப் பற்றிக் கொண்டார்.

“கற்பகம்.. அம்மா... இங்கே”

“அடடா.. எனக்கு நீங்க சொல்லித் தான் தெரியணுமா? பரவாயில்லை விடுங்க...” என்று புன்னகையுடன் கூற அதே நேரம் அறையின் உள்ளே இருந்து வெளிவந்த கனகத்தின் கண்களிலும் இந்த காட்சி பட்டது.

“அடேய் மகேசா.. காலங்கார்த்தால தொழிலை கவனிக்காம இதென்ன நடு கூடத்தில் வச்சு கொஞ்சிக்கிட்டு...” என்று தன்னுடைய கத்தி போன்ற நாவை சுழற்ற... குறி தவறாமல் கற்பகத்தை சென்று சேர்ந்தது. அவரசமாக கையை பிரித்துக் கொண்டவர் வாசல் வரை வந்து கணவரை வழி அனுப்பி வைத்தார்.

‘இப்படி எல்லாம் சாகசம் செஞ்சு தானேடி என் மகனை மயக்கி வச்சு இருக்க.. உன்னை ஒரு வழி ஆக்குகிறேனா இல்லையா பார்’ என்று சூளுரைத்தவர் அப்பொழுது தான் மாடியில் இருந்து தூக்கக் கலக்கத்துடன் இறங்கி வந்த ப்ரியாவை பார்த்தார்.

“அம்மா காபி” என்று கேட்டுக் கொண்டே சோம்பல் முறித்தவண்ணம் கீழே இறங்கி வந்தவளைக் கண்டதும் மீண்டும் காட்டுக் கத்தலாய் கத்தத் தொடங்கினார்.

“இது தான் நீ பிள்ளை வளர்க்கும் லட்சணமா? பொம்பளை பிள்ளை இவ்வளவு நேரம் தூங்கி எழுந்தா குடும்பம் விளங்குமா?”

“அவளுக்கு நேத்து தான் பரீட்சை முடிஞ்சது அத்தை... ஒரு வாரமா பிள்ளை சரியாவே தூங்கலை.... அதனால தான் நானும் எழுப்பலை” என்று விளக்கம் கொடுக்க.. அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் தொடர்ந்து வம்பு வளர்த்தார் கனகம்.

“ஏன் ஊர் உலகத்தில் யாருமே படிக்கிறது இல்லையா? எல்லாருமே இப்படித் தான் சூரியன் சுள்ளுன்னு அடிக்கிற வரை தூங்கிட்டு இருக்காங்களா? பொம்பளை பிள்ளையை எப்படி வளர்க்கிறதுன்னு தெரியாம வளர்த்துட்டு சப்பைக்கட்டு கட்டாதே. உன்னை மாதிரியே அவளையும் வளர்க்காதே.. அவளையாவது பெண் பிள்ளையாய் அடக்க ஒடுக்கமாய் மரியாதை எல்லாம் சொல்லிக் கொடுத்து பழக்கு” என்று பேச... அவர்கள் இருவரின் வாக்குவாதத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ப்ரியாவிற்கு கனகத்தை சுத்தமாக அடையாளம் தெரியவில்லை.

“அம்மா யார் இவங்க? ஏன் உங்களை சத்தம் போடுறாங்க?” என்று கேட்டபடியே கற்பகத்தின் அருகில் சென்று நிற்க...

“ஐயோ! ஐயோ!... சொந்த பாட்டியைப் பார்த்து யாருன்னு கேட்கிற அளவுக்கு என்னோட பேத்தி மனசில் விசத்தை விதைச்சு இருக்காளே.. இந்த சதிகாரி... இன்னும் என்னவெல்லாம் கொடுமையை நான் அனுபவிக்கணுமோ” என்று கத்தி கூப்பாடு போட.. தெருவில் போவோர் வருவோரெல்லாம் வீட்டின் முன்பு கூடிவிட கற்பகத்திற்கு ரொம்பவும் சங்கடமாகிப் போனது.

இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்தே அவர்கள் வீடு ரொம்பவும் அமைதியாகவே இருக்கும். வந்த முதல் நாளே தன்னுடைய வேலையை காட்டத் தொடங்கிய மாமியாரை எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல் கற்பகம் தடுமாற.. தாய்க்கு உதவ வேகமாக முன்வந்தாள் ப்ரியா.

“உங்களை எனக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து ஒரு நாள் கூட நான் பார்த்தது இல்லை.. அதனால தான் கேட்டேன். இதுக்கு எதுக்கு எங்க அம்மாவை திட்டறீங்க?” என்று குரல் உயர்த்தி தெளிவாக பேசியவளைக் கண்டு கனகத்திற்கு கோபம் வந்தது.

‘பேச்சைப் பார். இவங்க ஆத்தாக்காரி மாதிரி இவ வாயில்லா பூச்சி மாதிரி இருக்க மாட்டா போலவே... இந்த சில்லுவண்டை எல்லாம் ஆரம்பத்திலேயே தட்டி வைக்கணும். இல்லேன்னா அப்புறம் இந்த வீட்டில் நான் எப்படி ராணி மாதிரி இருக்க முடியும்?’ என்று எண்ணியவள் குரலை கொஞ்சம் குறைத்துக் கொண்டு தேன் சிந்தும் குரலில் பேத்தியை சமாதானம் செய்ய முயன்றார்.

“எனக்கு மட்டும் என்ன ஆசையா? உங்க அப்பனும், ஆத்தாளும் சொல்லாம கொள்ளாம காணாம போயிட்டாங்க.. ஒருவழியா இப்போ தான் தகவல் வந்துச்சு.. உங்களை எல்லாம் பார்க்க ஓடி வந்துட்டேன்” என்று பேசியவரின் பேச்சில் இருந்த போலித்தன்மையை உணர்ந்ததாலோ என்னவோ அவரிடம் மீண்டும் பேச்சை வளர்க்காமல் ப்ரியா நகர்ந்து விட... அதில் அவரது வன்மம் இன்னும் அதிகமானது.

‘அப்படியே அவங்க அம்மாக்காரிக்கு இருக்கும் திமிர்... இருடி பார்த்துக்கிறேன்’ என்று கறுவியவர் முகத்தை சாந்தமாக வைத்துக் கொண்டு அடுத்து என்ன செய்து கற்பகத்தின் நிம்மதியை குலைக்கலாம் என்று எண்ணியபடியே நகர்ந்து சென்று விட.. கற்பகத்தின் கண்களுக்கு முன்னால் இனிவரும் நாட்கள் எப்படி இருக்கும் என்பது தெளிவாகவே தெரிந்தது.



Post Reply

Return to “உன்மத்தம் கொண்டேனடி உன்னால்”