உன்மத்தம் கொண்டேனடி உன்னால் 13

Moderator: Madhumathi Bharath

Post Reply
User avatar
Madhumathi Bharath
Site Admin
Posts: 124
Joined: Mon May 11, 2020 9:11 am
Location: Tamilnadu
Has thanked: 117 times
Been thanked: 31 times

உன்மத்தம் கொண்டேனடி உன்னால் 13

Post by Madhumathi Bharath »

அத்தியாயம் 13
ப்ரியா தன்னுடைய படிப்பைத் தவிர எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. மகேசனின் கையில் இருந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக கறையத் தொடங்க ஏதாவது வேலைக்கு சென்றே தீர வேண்டும் என்ற சூழல் வீட்டினில் உருவானது. மறுபடியும் ப்ரியாவின் நகைகளை அடகு வைக்க கற்பகம் அனுமதிக்கவில்லை. அதை பின்நாளில் ஏதாவது அவசரத் தேவையின் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தீர்மானமாக கணவரிடம் மறுத்து பேசி விட அது உண்மை தான் என்பதால் மகேசன் தீவிரமாக வேலை தேடத் தொடங்கினார்.

எங்கே போனாலும் அவருக்கு வேலை கிடைத்தபாடில்லை. அவருடைய வயது ஒரு காரணம் என்றாலும் இன்னொரு காரணம் அவர் பல வருடங்களாக முதலாளியாக இருந்தவர்... இப்பொழுது உடல் வணங்கி வேலை செய்வாரோ என்ற சந்தேகத்திலேயே பல பேர் அவருக்கு வேலை கொடுக்க மறுக்க... என்ன செய்வது என்று விழி பிதுங்கி நின்றார் மகேசன். ட்ராவல்ஸ் வைத்து இருந்த பொழுது அறிமுகமான நண்பர் ஒருவர் தனக்கு தெரிந்த ஒருவரிடம் மகேசனுக்காக சிபாரிசு செய்து அவரது ஆட்டோவை வாடகைக்கு கொடுத்தார்.

மகேசனும் கொஞ்ச நாள் தானே என்று எண்ணி மனதை தேற்றிக் கொண்டார். ஆட்டோ ஓட்டியதில் வந்த வருமானம் அவர்களின் வயிற்றுப் பசியை போக்கியது. ஆனால் கோர்ட்டில் நடந்து கொண்டிருந்த அவர்களின் வழக்கிற்காக அவர் நிறைய பணத்தை செலவு செய்ய வேண்டி இருந்தது.

அந்த சொத்துக்களின் அடிப்படை மூலதனம் கனகம் கொடுத்து இருப்பதாக சொல்லப்பட்டு இருந்தது. அந்த பொய்யை கோர்ட்டில் நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் திரட்டுவதிலுமே நேரம் கழிந்தது. ப்ரியா பன்னிரெண்டாம் வகுப்பில் அடி எடுத்து வைத்தாள். முன்னைக் காட்டிலும் அதிகமாக படித்தாள். அவளது முழு கவனமும் தன்னுடைய படிப்பின் மீது மட்டுமே இருந்தது. இரவு பகல் பாராமல் வெறி கொண்டு உழைத்ததின் பயனாக நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்தாள்.

அவள் விரும்பியபடி மருத்துவம் சேர வேண்டுமெனில் நீட் தேர்வில் பாசாக வேண்டிய அவசியம் ஏற்படவே அதற்கும் அயராது உழைத்தாள். நீட் தேர்விற்கு மற்ற மாணவர்கள் கோச்சிங் கிளாசிற்கு செல்ல அதற்கு பணம் கட்டக்கூட அப்பொழுது மகேசனிடம் பணம் இல்லாமல் போனது. தன்னுடைய அன்பிற்கு உரிய ஒரே மகள் விரும்பிய படிப்பை படிக்க வைப்பதற்கு கூட தன்னிடம் பணம் இல்லையே என்று பெற்றவர்கள் இருவரும் இரத்தக் கண்ணீர் வடித்தனர்.

வெறி வந்தது போல ப்ரியாவின் கவனம் முழுக்க படிப்பில் மட்டுமே இருந்தது. இரவு பகல் பாராமல் படித்தாள். இந்த பரிட்சையில் தேர்வாகி விட்டால் அவள் விரும்பிய மருத்துவப்படிப்பை படித்து விடலாம் என்ற எண்ணம் அவளது ஆழ்மனதில் அழுத்தமாக பதிந்து இருந்தது.

அன்றைய தினம் ப்ரியாவிற்கு நீட் பரீட்சை இருந்ததால் வேகமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். அவள் எழுதும் தேர்வில் நல்லபடியாக தேர்ச்சியடைய வேண்டும் என்று எண்ணிய கற்பகமும் அவளுக்கு துணையாக ஆட்டோவில் ஏறிக் கொள்ள, மகேசன் இருவரையும் தன்னுடைய ஆட்டோவிலேயே ஏற்றிக் கொண்டு புறப்பட... ஆட்டோவில் கூட புத்தங்கங்களையே படித்துக் கொண்டிருந்தாள் ப்ரியா.

அவர்கள் மூவருக்கும் எமனாக அவர்களின் பின்னாலேயே வந்த லாரி அவர்கள் ஆட்டோவின் மீது ஏறி இறங்க... சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார் கற்பகம். கண் இமைக்கும் நேரத்திற்குள் எல்லாமும் நடந்து முடிந்து விட , பலத்த காயம் அடைந்த ப்ரியாவும், மகேசனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

போலிஸ் விசாரணையில் அந்த லாரியில் ப்ரேக் பிடிக்காததால் விபத்து நடந்ததாக தெரியவர அந்தக் கதை அத்தோடு முடிந்தது. ஆனால் அந்த விபத்தின் விளைவால் ப்ரியாவிற்கு அந்த விபத்திற்கு ஒரு மாதத்திற்கு முன் நடந்த நினைவுகள் அனைத்தும் மறந்து போய் விட்டது என்பதை அறிந்து கொண்டார் ஜெயா.

அவளுக்கு இப்பொழுதும் தான் பன்னிரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருப்பதாக நினைவு... கையில் இருந்த கொஞ்ச நஞ்ச பணமும், ப்ரியாவின் நகைகளும் அவளின் மருத்துவ செலவுக்கே சரியாகி விட மகளை எப்படி பழையபடி மாற்றுவது என்று புரியாமல் திகைத்துப் போய் இருந்த நேரத்தில் தான் ரவி அவருக்கு அறிமுகமானான்.

அவனைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் மறைக்காமல் கூறியவனின் மீது அவருக்கு கோபம் வரவில்லை. மாறாக எப்படியாவது தன்னுடைய மகள் மீண்டும் பழையபடி சிட்டுக்குருவி போல நடமாடினாலே போதும் என்ற எண்ணம் தான் இருந்தது.

“ரவி.. எனக்கு ப்ரியாவை பத்தி ஓரளவுக்கு புரிஞ்சுக்க முடியுது... என்னோட கெஸ்ஸிங் சரியா இருந்தா அவங்க அம்மாவுக்கு உயிர் போனதை அவங்க கண் முன்னாடியே அவங்க பார்த்து இருக்கணும்... அவங்க அம்மா இறந்து போனதையும், கஷ்டப்பட்டு படிச்சு பரிட்சை எழுத முடியாம போனதையும் அவளால ஏத்துக்க முடியல.. அந்த நிகழ்ச்சியை அவளோட மனசு நம்ப மறுக்குது.

அதுக்கு முன்னாடி இருந்த நாட்களில் மட்டும் வாழ விரும்புறாங்க. அந்த நாட்களை விட்டு வெளியே வந்தா தன்னோட தாய் இறந்ததையும், தன்னோட சின்ன வயசு இலட்சியமான மருத்துவப் படிப்பை படிக்க முடியாமல் போனதையும் ஏத்துக்க வேண்டி இருக்குமேன்னு அவங்களுக்கு பயம்... இதை கொஞ்சம் கொஞ்சமா சரி செஞ்சிடலாம்” என்று நம்பிக்கையுடன் கூற ரவியின் கண்கள் ஒளிர்ந்தது.

“ப்ரியா... இப்போ என்ன செய்றா டாக்டர்...”

“நைட் மருந்து கொடுத்து தூங்க வச்சேன்... இன்னும் எழுந்திரிக்கல..” என்று பேசிக் கொண்டே அவன் கரங்களில் காபியை நீட்ட ஏதோ யோசனையுடன் வாங்கியவன் கோப்பையை தவற விட சட்டையில் காபி கொட்டிப் போனது.

“ஓ..சாரி ரவி... நான்...”

“இல்லை டாக்டர்... தப்பு என் மேல தான்... இருங்க நான் போய் வாஷ் செஞ்சிட்டு வந்திடறேன்” என்று சொல்லி எழுந்தவன் திகைத்தான். அந்த வீட்டில் இருப்பது ஒரே ஒரு பாத்ரூம் தான். அதுவும் ப்ரியா தங்கி இருக்கும் அறையோடு அட்டாச் செய்யப்பட்டு இருக்க, தனியாக அவள் தூங்கிக் கொண்டு இருக்கும் பொழுது எப்படி போவது என்று யோசனையுடன் அப்படியே அமர்ந்து விட ... ஜெயா புரிந்து கொண்டதைப் போல சிரித்தார்.

“அவ தூங்கிட்டு தான் இருக்கா ரவி.. அதுவும் இல்லாம ப்ரியா யாரையும் இதுவரை அடிச்சது இல்லை.. அதனால தைரியமா போங்க.. நான் போய் உங்களுக்கு வேற காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் புகுந்து கொண்டார்.

அறையில் தூங்கிக் கொண்டிருந்த ப்ரியாவை பார்க்காதது போல பார்த்தவன் அறையின் உள்ளே இருந்த குளியல் அறைக்குள் நுழைந்தான். சட்டையை கழட்டி அங்கே இருந்த குழாயில் கறையை அலசிக் கொண்டிருந்தவன் கதவு திறக்கும் சத்தம் கேட்டு வேகமாக திரும்பிப் பார்க்க ப்ரியா பாத்ரூமினுள் நுழைந்து கொண்டிருந்தாள்.

‘என்ன இவள் பாட்டிற்கு உள்ளே வருகிறாள்?’ என்று எண்ணியவன் சட்டை இல்லாத தன்னுடைய வெற்று மார்பை அவசரமாக அருகில் இருந்த டவலை எடுத்து மறைத்துக் கொண்டான். ரவி பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுதே அவன் அங்கே இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் ப்ரியா தன்னுடைய ஆடைகளை கலைத்து விட்டு குளிக்கத் தயாராக..... அதிர்ச்சியில் உறைந்து போனான் ரவி. அடுத்த நொடியே சட்டையை எடுக்கக் கூட தோன்றாமல் அங்கேயே போட்டுவிட்டு தன்னுடைய காரில் ஏறிப் போய் விட்டான்.

மனம் நிம்மதி அடையாமல் தெருத்தெருவாக காரில் சுற்றி வந்தவன் ஜெயாவிடம் இருந்து போன் வந்ததும் தான் தன்னிலைக்கு வந்தான்.

“என்னாச்சு ரவி?.. எங்கே இருக்கீங்க? சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டீங்க” என்று கேட்கவும் அதற்கு மேலும் அடக்க மாட்டாமல் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்து விட்டான். அவனது பேச்சை குறுக்கிடாமல் கேட்ட ஜெயா சிந்திக்கத் தொடங்கினார்.

“நான் ஒரு ஆண் டாக்டர். நான் ஒருத்தன் அங்கே இருக்கிற உணர்வே அவளுக்கு இல்லையே... அவ பாட்டுக்கு ட்ரெஸ் எல்லாம் ...” அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது ரவிக்கு.

“ரவி.. ப்ளீஸ் ரிலாக்ஸ்.. மனநிலை சரியில்லாத நிலைமையில் இதெல்லாம் சகஜம்... இதை விட மோசமான கேஸ் எல்லாம் நான் பார்த்து இருக்கேன். எத்தனை முறை ட்ரெஸ் போட்டு விட்டாலும் அதை கிழிச்சுக்கிற பெண்களை எல்லாம் நான் பார்த்து இருக்கேன். அப்படி பார்த்தா ப்ரியா எவ்வளவோ மேல்.. நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க.. ப்ரியாவை சரி செய்யுறது என்னோட பொறுப்பு” என்று உறுதி கூற ரவியால் அப்பொழுதும் நிம்மதி அடைய முடியவில்லை. அவன் மனம் தண்ணீரை விட்டு வெளியே விழுந்த மீனாகத் துடித்தது ப்ரியாவிற்க்காக.



Post Reply

Return to “உன்மத்தம் கொண்டேனடி உன்னால்”