Page 1 of 1

உன்மத்தம் கொண்டேனடி உன்னால் 1

Posted: Fri Sep 04, 2020 9:52 am
by Madhumathi Bharath
ஆசிரியர் உரை:
இந்த கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதி இருக்கிறேன்.. கல்லூரி தேர்விற்காக ஓய்வு இல்லாமல் படித்த அந்த மாணவியை மனநிலை சரியில்லாத நிலையில் ஒருநாள் மருத்துவமனையில் சந்தித்தேன். அளவுக்கு அதிகமான மன அழுத்தமே அந்த பெண்ணின் அந்த நிலைக்கு காரணம் என்று எனக்கு தெரிய வந்தது. பெண்ணைப் பெற்ற அந்த தகப்பனார் ஒரு ஆட்டோ டிரைவர். மருத்துவமனையில் தோளுக்கு மேல் வளர்ந்த பெண் பிள்ளையை சமாளிக்கும் விதம் தெரியாமல் அவர் கண்கள் கலங்க நின்ற தோற்றம் இன்றளவும் என் மனதை விட்டு நீங்காமல் இருக்கிறது.
தற்போதைய கால கட்டத்தில் படிப்பு என்பது குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தைக் கொடுக்கிறதோ என்று அஞ்சத் தொடங்குகிறது என் மனம். ரேஸில் வேகமாக ஓடுபவனுக்கும், துரத்தும் தெருநாயிடம் கடி வாங்காமல் தப்பித்து ஓடுபவனின் வேகத்திற்கும் நிச்சயம் வித்தியாசம் உண்டு. இந்த காலத்துக்கு பிள்ளைகள் நம்மை விடவும் தெளிவானவர்கள். படிப்பு இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு நேர்மையான தொழில் செய்து தங்களைக் காத்துக் கொள்வார்கள்.
படிப்பு என்பது ஒருவரின் அறியாமையை நீக்கி தெளிவு செய்ய வேண்டுமே தவிர... ஒருவரை மன நோய்க்கு காரணமாக இருந்து விடக்கூடாது. பள்ளியிலோ அல்லது வீட்டிலோ அவர்களுக்கு ஆதரவையும், நம்பிக்கையையும் கொடுத்தால் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்து இருக்கவே இருக்காதோ.. என்பது என் கருத்து.
இந்த கதையைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.

நன்றி

மதுமதி பரத்

அத்தியாயம் 1

பிள்ளையார் பட்டி ஹீரோ நீதான்பா கணேசா
நீ கருணை வெச்சா நானும் ஹீரோபா
லியோ கபாசா. லியோ கபாசாஆஆஆஆஆ.

என்று உச்சஸ்தாயில் பாடிக் (கத்திக்) கொண்டு இருந்தாள் நம் கதையின் நாயகி ப்ரியா...
“ப்ரியா... அம்மாடி ப்ரியா ... எங்கேடா இருக்க?”
“இதோ பூஜை ரூம்ல பிள்ளையாருக்கு ஐஸ் வச்சுட்டு இருக்கேன்ப்பா....”
“காபி சாப்பிடுடா”
“இதோ வந்துட்டேன்... இன்னிக்கு முக்கியமான பரீட்சை இருக்குப்பா... அதான் என்னோட ஆளுக்கு காலையிலேயே எழுந்து பூஜை செஞ்சு தாஜா பண்ணிட்டு இருக்கேன்”
“நீ தான் சமர்த்தா படிக்கிற பிள்ளையாச்சே.. அப்புறம் என்னடா செல்லம்... என் பொண்ணு எப்பவும் எல்லாத்துலயும் முதல் மார்க் வாங்குறதில் கெட்டிக்காரி ஆச்சே...” என்றவரின் குரலில் இருந்த கரகரப்பு அவரின் அழுகுரலை மகள் கண்டு கொள்வாளோ என்ற பதட்டத்துடன் முயன்று தன்னை சமாளித்துக் கொண்டார்.
“நீங்க தான் இப்படி சொல்றீங்க? ஆனா கிளாஸ்ல இருக்கிற என்னோட மத்த பிரண்ட்ஸ் எல்லாரும் என்னை விட சூப்பரா படிக்கறாங்க தெரியுமா?” என்றவளின் குரலில் வாட்டம் தெரிய.. மகேசனுக்கு பொறுக்கவில்லை.
“அவங்க எல்லாரையும் விட எப்பவும் நீ தானே கிளாஸ்ல முதல் மார்க் வாங்குற.... அப்புறமும் ஏன் உனக்கு இவ்வளவு பதட்டம்?”
“அட போங்கப்பா.. அந்த மார்க் வாங்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்குத் தானே தெரியும்... அந்த கவிதாவுக்கும் எனக்கும் ஒரு மார்க் தான் வித்தியாசம்.... ஏதோ நான் கொஞ்சம் அலர்ட்டா இருந்ததால தப்பிச்சேன்... தெரியுமா?”
“சரிடா... டிபன் செஞ்சு வச்சுட்டேன் சாப்பிட்டு கிளம்பறியா?”
“உங்களுக்கு ஏன்ப்பா இந்த வேலை எல்லாம்? அம்மா எப்படியும் ஊரில் இருந்து இரண்டு நாளில் திரும்பிடப் போறாங்க.... அதுவரைக்கும் நான் செய்ய மாட்டேனா?”
“அது...” என்று சில நொடிகள் தயங்கியவர், எப்பொழுதும் சொல்லும் அதே வார்த்தைகளை கொண்டு சமாளிக்கத் தொடங்கினார்.
“நீ படிக்கிற பிள்ளை... நல்லா படிடா... இரண்டு நாள் தானே நான் சமாளிச்சுப்பேன்...”
“ஹ்ம்ம்.. என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்க... சரிப்பா.. மதியம் நான் ஸ்கூல் கேன்டீனில் வாங்கி சாப்பிட்டுக்கறேன்... இப்ப என்னை உங்க ஆட்டோவிலேயே ஸ்கூல்ல இறக்கி விட்டுடுங்கப்பா... பஸ்ஸில் போனா உட்கார்ந்து பொறுமையா படிக்க முடியாது”
“சரிடா ப்ரியா” என்றவரின் கண்கள் மகளை எண்ணிக் கலங்கத் தொடங்க மகள் அறியாமல் இமை சிமிட்டி தன்னை சமாளித்துக் கொண்டார்.
“இன்னும் இரண்டு இட்லி வச்சுக்கோ ப்ரியா”
“ஐயோ போதும்ப்பா.. அப்புறம் எக்ஸாம் ஹாலில் தூங்கி வழிஞ்சுடுவேன். ஏற்கனவே நான் கூடுதலா தான் சாப்பிட்டு இருக்கேன். எப்பவும் அம்மாவை விட நீங்க சமைக்கும் சாப்பாடு டேஸ்ட்டே தனி தான்.. அம்மாவுக்கு போன் செஞ்சு இன்னும் ஒரு இரண்டு நாள் அவங்க பிரண்டு வீட்டில் இருந்துட்டு வர சொல்லுங்க... இரண்டு நாளைக்கு நான் உங்க கையால நல்ல சாப்பாடு சாப்பிடுவேன்” என்று கூறி கலகலத்து சிரித்த மகளுக்கு என்ன மறுமொழி கூறுவது என்று புரியாமல் அவர் திணறிக் கொண்டிருக்க... ப்ரியாவோ அதை எல்லாம் கவனிக்கவே இல்லை. அவளது கவனம் முழுக்க அவள் கையில் இருந்த புத்தகத்தில் தான் இருந்தது.
“சரிப்பா... நான் ஸ்கூல்க்கு கிளம்பறேன்.. என்னப்பா... நீங்க இன்னும் காக்கி யூனிபார்ம் போடாம இருக்கீங்க.. சீக்கிரம் கிளம்புங்கப்பா... எனக்கு நேரமாச்சு... எக்ஸாம் ஆரம்பிச்சுடும்” என்று சொன்ன மகளை பார்த்த பெற்றவரின் மனது உள்ளுக்குள் பதறித் துடித்தது.
“சட்டை மாத்த எவ்வளவு நேரம் ஆகப் போகுது... நீ இந்த பாலைக் குடி... நான் ஒரு நொடியில் கிளம்பிடுவேன்” என்று சொன்னவர் மகளின் கைகளில் பால் டம்ளரை திணிக்க... மறுத்து பேசாமல் கடகடவென்று தொண்டையில் சரித்துக் கொண்டவள் கையில் இருந்த புத்தகங்களோடு அங்கே இருந்த சேரில் அமர்ந்து மீண்டும் படிப்பை தொடர.. காலி டம்ளரை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றவர் சற்று நேரம் பொறுத்து திரும்பி வந்து பார்க்கும் பொழுது மகள் அதே சேரில் அமைதியாக கள்ளம்கபடமில்லா குழந்தை போல உறங்கிக் கொண்டு இருந்தாள்.
மகள் நன்றாக உறங்குவதை உறுதி செய்து கொண்டவர் அது நேரம் வரை அடக்கி வைத்திருந்த அழுகையை அடக்க முடியாமல் கதறித் தீர்த்தார். அவரது அவலக்குரல் அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது.
“ஐயோ கற்பகம் என்னால முடியலையே... நான் என்ன செய்வேன்?... நீ இறந்து போன விஷயத்தை கூட இன்னும் நம்ம பொண்ணு கிட்டே சொல்ல முடியலையே.... எத்தனை நாளைக்குத் தான் என்னால் மறைக்க முடியும்? தெரிஞ்சா ப்ரியாவோட கதி என்னாகுமோ தெரியலையே.... நம்ம பொண்ணோட நிலைமையை என்னால பார்க்க முடியலையே கற்பகம்” என்று வாய் விட்டு கதறி அழுதார் மகேசன்.
அதே நேரம் அவர்களின் வீட்டு வாசலில் வந்து நின்ற காரின் ஒலியை கேட்டதும் அவருக்கு உடம்பெல்லாம் பதறத் தொடங்கியது.
‘இது நிச்சயம் அவன் தான்... சொன்ன மாதிரியே வந்துட்டானே...பாவி.. என் பொண்ணை என்கிட்டே இருந்து பிரிக்கப் போறானே’
“நான் சொன்ன மாதிரியே பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துட்டீங்க தானே?” அலட்டல் இல்லாமல் கேட்ட ரவியை வெறித்துப் பார்த்தார் மகேசன். அவனும் அவரிடம் இருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் உறங்கிக் கொண்டு இருந்தவளை கைகளில் பூப்போல ஏந்திக் கொண்டு காரை நோக்கி செல்ல பதட்டத்துடன் அவர்களை பின் தொடர்ந்தார் மகேசன்.
“தம்பி... அவ எழுந்து கேட்டா...”
“அது என் கவலை.. அதெல்லாம் நான் பார்த்துப்பேன்... நீங்க இனி அதை எல்லாம் பத்தி யோசிக்க வேண்டாம்.” என்றவனின் அழுத்தமான பதிலில் அவரது வாய் அடைத்துப் போனது.
“அங்கே போய் சேர்ந்ததும் ப்ரியாவை என்னிடம் பேச சொல்லுங்க தம்பி...”
“நோ...” என்றான் ஒற்றை சொல்லாக...
“நீங்க அவளோட அடிக்கடி பேசிட்டு இருந்தா அது எனக்கு இடைஞ்சலா இருக்கும். அதனால அப்படி ஒரு விஷயத்தை நினைச்சு கூட பார்க்காதீங்க” என்றான் உத்தரவாக...
“எனக்கு...நான்... ப்ரியாவை....” என்று அவர் வார்த்தைகள் வராமல் தடுமாற நடந்து கொண்டு இருந்தவன் திரும்பி நின்று அவரைப் பார்த்த துளைக்கும் பார்வையில் அவர் வாய் தன்னால் மூடிக் கொண்டது.
“இதை தவிர உங்களுக்கு வேற ஏதாவது வழி இருக்கா?” என்று அவன் அழுத்தமாக கேட்க அவர் தலை தானாகவே தொங்கிப் போனது. இரும்பு போன்ற அவனது குரலில் இருந்த அழுத்தம் அதற்கு மேல் அவரை பேச அனுமதிக்கவில்லை. அசட்டையான தோள் குலுக்கலுடன் ரவி, ப்ரியாவை கைகளில் ஏந்தி காரில் சென்று படுக்க வைத்தவன் அத்தோடு முடிந்தது என்பது போல அவர் இருந்த திசைப்பக்கம் கூட திரும்பாமல் அங்கிருந்து புறப்பட்டான்.
பூவாக மகள் உறங்கிக் கொண்டிருக்க... இனி அவள் எதிர்கொள்ள வேண்டிய பூகம்பத்தை எண்ணி அவர் தந்தை கதறிக் கொண்டிருக்க விதி அவர்கள் மூவரின் நிலையையும் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கியது.