பறவைகள் தேடும் இலையுதிர் காலம்
-
- Moderators
- Posts: 10
- Joined: Mon May 25, 2020 3:05 pm
- Been thanked: 1 time
பறவைகள் தேடும் இலையுதிர் காலம்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா....
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா...' என்ற பாடலை போட்டுவிட்டு டிரைவர் வண்டியை ஸ்டார்ட் பண்ணினார்.
"போற ஊருக்கு எல்லாரும் சரியான சில்லறை வைச்சுட்டு உக்காரு. இப்பத்தான் காலையில வண்டி எடுக்குது. நோட்டா கொடுத்துட்டு காலங்காத்தால சாவடிக்காதீங்க. சில்லறைய கரெக்டா வச்சுக்க" என்று சொல்லிவிட்டு டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார் கண்டக்டர்.
"டிக்கெட் டிக்கெட் டிக்கெட்" சத்தமிட்டு கொண்டே நகர, காலை வேளையில் அடிச்சுபுடிச்சு பஸ்ஸில் ஏறி ஜன்னல் சீட்டு பக்கத்தில் உட்கார்ந்து பலபேர் போக ஆரம்பிச்சுட்டாங்க எப்பவும் போல.
கண்டக்டருக்கு சில்லறை பெறுவது ஒரு பிரச்சனை என்றால், தூங்கிக்கொண்டு இருப்பவனையும் தூங்குவது போல் படிப்பவர்களையும் எழுப்பி டிக்கெட் தருவது என்பது கத்திமேல் நடப்பது போலத்தான்...
டவுனில் இருந்து கிராமங்கள் வழியாக செல்லும் பேருந்து என்பதால் கூட்டம் குறைவாகவே தான் இருந்தது.
காலையிலயே சூடாகி போன கண்டக்டர் டிக்கெட் கொடுத்துக்கொண்டு வர அவரின் பொறுமையை சோதிப்பதாக உறங்கிக்கொண்டு இருந்தார் ரத்தினசாமி.
"யோவ் பெருசு. யோவ் எந்திரியா" உலுக்கிய போது தன் வயதின் மூப்பிற்கேற்ப தலையை ஆட்டியபடி கண்கள் திறக்கவே கஷ்டப்பட்டு விழித்தார். அவர் சுய நினைவுக்கு வர சில நொடிகள் தேவைப்பட்டது.
அதற்குள் கண்டக்டர், "யோவ் பெருசு. ஏன்யா காலங்காத்தால இப்படி தூங்கி மனுசன கடுப்பேத்துறீங்க. டிக்கெட் வாங்கிட்டு தூங்கி தொலைய வேண்டியது தானே. எந்த ஊரு போகனும். சொல்லுயா சீக்கிரம்" என கடிந்து கொள்ள,
மெல்ல சுதாரித்தவராய் கை நடுங்க பாக்கெட்டில் பணத்தை தேடிக்கொண்டே, "மொட்டைகாட்டுபுதூர் ஒன்னு கொடுங்க" என்றார்
15 ரூபாய் டிக்கெட் கிழித்து கொடுத்துவிட்டு காசை கேட்க, கை நடுங்கியபடி நீட்டினார் ரத்தினசாமி.
பாடல்களும் மாறிக்கொண்டே இருந்தது. ஊர்களும் மாறிக்கொண்டே இருந்தது.வழி நெடுக பச்சைப் பசேலென்று இருந்த கிராமங்களில் பிளாட்டுகள் முளைத்த பூமியாய் மாறியிருந்தது.
எல்லாம் பார்த்தவாறே தன் பழைய நினைவுகளை ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தார்.
சில நிமிடங்களிலேயே நினைவுகளோடு கண்ணை அயர்ந்து உறங்க ஆரம்பித்தார் அந்த காலைப்பொழுதில்.
ஊர் செல்ல செல்ல கூட்டமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. அமர இருக்கை இல்லாமல் பலரும் நின்றுகொண்டிருக்க படியிலும் கூட்டம் தொங்கிக் கொண்டிருந்தது.
45 நிமிடங்கள் கடந்திருக்கும். திடீரென்று யாரோ ரத்தினசாமி உலுக்குவது போல் உணர்ந்தார். அருகிலிருந்தவர், "ஐயா அடுத்து மொட்டைகாட்டுபுதுர் தான். இப்பவே எந்திரிச்சுக்குங்க. இல்லனா அந்த கண்டக்டர் கத்துவான். வயசு வித்தியாசம் பார்க்காம சில்லுனு சண்டைக்கு வருவான்" என்றதும் தன் கையில் கொண்டு வந்த பையை எடுத்துக் கொண்டு இறங்க தயாரானார்.
அந்த கூட்டத்தில் சிக்கி சிக்கி அவர் வெளியே வருவதற்குள் அவர் பட்டபாடு இருக்கே சாறு பிழியும் மிசினில் சிக்கிய கரும்பை போல இருந்தது.
பேருந்தை விட்டு இறங்கியவுடன் அவரை கம்பீரமாக வரவேற்றது அந்த ஒற்றை புளியமரமும், பாதி இடிந்த நிலையில் இருந்த பேருந்து நிறுத்த கட்டிடமும்.
மழை பொய்த்துப்போன கிராமம். தண்ணீர்கூட சிரமமான நிலை தான். பலரும் ஊரை காலி செய்து விட்டு வெளியூர் சென்றதால் அரசாங்கம் கூட கைவிட்டு விட்டது அந்த கிராமத்தை.
இந்த ஊருக்கு வரும் ஒரே ஒரு கவர்மெண்ட் ஊழியர் தபால்காரர் மட்டும்தான். அதுவும் தபால் கொடுக்க அல்ல. அரசாங்கம் கொடுக்கும் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் தொகையைக் கொடுக்க.
20 வருடங்களுக்கு முன் 300 வீடுகள் இருந்த இந்த கிராமத்தில் தற்போது 10 வீடுகள் மட்டுமே உள்ளது. அதுவும் தங்கள் மகன் அல்லது மகள்களால் கைவிடப்பட்ட அந்த முதிய இதயங்கள்.
காலை பொழுது எட்டு மணியை கடந்திருந்தது. 70 வயது நிரம்பிய ரத்தினசாமிக்கு கைத்தடி இல்லாமல் நடக்கும் அளவிற்கு உடம்பில் தெம்பு இருந்தது.
அந்த ஊரின் எல்லையில் குட்டை ஒட்டிய பகுதியும் அங்கே சில பனைமரங்களும் உயர்ந்து இருந்தது. அதன் பக்கத்தில் தான் அழகான திண்ணை ஓட்டு வீடு.
அந்த வீட்டிற்கு சென்ற ரத்தினசாமி உடல் சோர்வில் கையூன்றி அமர்ந்து சத்தம் கூட இட முடியாமல் மூச்சு வாங்கி கொண்டிருந்தார்.
அப்போது வெளியே குமரேசன், "யாரு நீங்க. உங்களுக்கு யாரு வேணும்? இங்கே எதுக்கு உட்கார்ந்து இருக்கீங்க" என்று கேட்டான்.
ஆனால் அவரோ பதில் சொல்லும் நிலையில் இல்லை. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருந்த நேரம் அது.
"ஏன்டா கடைக்கு போய்ட்டு வர சொன்னா, யாரு கிட்ட வெளிய நின்னு பேசிட்டு இருக்க?" என்று கத்திக்கொண்டே வந்தாள் அந்த வீட்டின் மகாராணி கனகா.
வெளியே வந்தவரை பார்த்துவிட்டு, "மாமா எப்ப வந்தீங்க? ஒரு போன் பண்ணிட்டு வரக்கூடாதா?"
"டேய் உள்ள போயி தண்ணி எடுத்துட்டு வா. சீக்கிரம் எடுத்துட்டு வா! ஓடு" என்று சொல்ல, அந்த 15 வயது சிறுவன் ஒரே ஓட்டத்தில் சென்று சொம்பில் தண்ணீர் கொண்டு வந்தான்.
தண்ணீரை கொடுத்து குடிக்க வைத்து அவர் நெஞ்சை அழுத்தி தடவிக் கொடுத்துக் கொண்டு இருந்தாள் கனகா. தொண்டை நனைந்ததும் அவரின் கண்களில் ஒளி தெளிவாக தெரிய ஆரம்பித்தது. மூச்சிரைப்பதும் சற்று குறைந்தது.
" ஏனுங்க மாமா? அங்கிருந்து வாரவரு ஒரு வாட்டார்கேன்ல தண்ணி வாங்கி வச்சுக்கிறது இல்லையா? ஊருக்கு வாரேன்னு சொல்லியிருந்தா பையன பஸ் ஸ்டாப் வரச் சொல்லியிருப்பனே" என்றாள்.
"ஆறு மாசத்துக்கு முன்னாடியே செல்போன் தண்ணீல விழுந்திருச்சு. அப்புறம் அது ஒன்னும் வேலைக்கு ஆகல. பக்கத்து வீட்டு பையன் தான் புது போன் வாங்கி கொடுத்தான். நம்பர் எல்லாம் அழிஞ்சு போச்சுத்தா" என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு சொன்னார்.
"நீங்க எப்படி இருக்கீங்க மாமா? இந்த சிறுக்கிய பாக்க இப்பதான் உங்களுக்கு மனசு வந்துச்சா?" என்றாள்.
"என்னாத்தா பண்றது. நானும் அசந்துகிட்டேன். அக்காளும் மூட்டு வலி அது இதுன்னு அடிக்கடி படுத்துகிறா. அப்படியே வருஷம் ஓடிப்போச்சு. அது இருக்கட்டும். நீ எப்படித்தா இருக்க" என்றார்.
"உங்க தம்பியை கட்டுனதுக்கு அப்புறம் எப்படி இருப்பேன். ஏதோ இருக்கேனுங்க. அந்த மனுஷனா கட்டி பொழச்சத்துக்கு மூனு புள்ளைய கொடுத்ததுதான் மிச்சம். நல்லா வாழ்ந்த மனுசன் பாழாப்போன சாராயத்தை குடிச்சிட்டு போயி சேர்ந்துட்டாரு" என்று சொல்லிக்கொண்டே மூக்கை உறிஞ்சி முந்தானையால் துடைத்தாள்.
"முண்டச்சி ஆனா அப்புறம் ஊருக்காரனுக நிம்மதியா பொழைக்க விடுவானுகளா? ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில ஆடுகள மேச்சுகிட்டு இந்த நாசமத்து போன ஊருக்குள்ள உழைச்சு வாழ்ந்துட்டு இருக்கேனுங்க" என்று கண்ணீரை துடைத்தாள்.
ரத்தினசாமி எதுவும் பேசவில்லை. அமைதியாக தலையை குனிந்தவாறே தன் எண்ண அலைகளை கடந்த காலத்தை நோக்கி ஓட்டிக்கொண்டு இருந்தார்.
( 21 ஆண்டுகளுக்கு முன்பு வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு கணக்காளராக சேர்ந்தவன் சேகர். ரத்தினசாமியின் சித்தப்பா மகன். பல இடங்களில் வேலை பார்த்துவிட்டு அங்கு வந்து சேர்ந்தான். அதே தோட்டத்தில் வேலைக்கு வந்தவள் தான் கனகா.
இருவரும் வேறு வேறு சாதியினை சார்ந்தவர்கள். கொஞ்சநாள் பழக்கத்தில் இருவருக்கும் காதல் உண்டாக கண் ஜாடையில் அதிகம் பேசிக்கொள்வார்கள்.மௌனமொழியில் மலர்ந்த காதல் மரண வழிக்கு ஒருநாள் வித்திட்டது.
அவர்களின் காதல் ஊராருக்கு தெரிந்து பிரச்சினை பெரிதாக மாற ஊரை காலி செய்து விட்டு இருவரும் காவல் துறையில் இருந்த தன் நண்பன் மூலம் திருமணம் செய்து கொண்டு தங்கள் இல்லற வாழ்க்கையை ஆரம்பித்தனர்.
ஆனால் இருவரின் வீட்டிலும் திவசமே செய்தார்கள். வருடங்கள் கழிந்தாலும் சொந்தங்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அனாதை போல வாழ்ந்தவர்களுக்கு ரத்தினசாமி மற்றும் அவரது மனைவி தெய்வானை உதவியாகவும் அரவணைப்புடனும் கடிதங்கள் மூலம் போன்கள் மூலம் அன்பை பரிமாறிக் கொண்டனர்.
ரத்தினசாமி மட்டும் அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் தன் தம்பியை பார்த்துவிட்டு உதவிக்கு பணமும் கொடுத்துவிட்டு வருவார்.
இரண்டு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்தவர்கள் வாழ்க்கையில் சாபமாய் அமைந்தது கள்ளச்சாராயம்.
யாருக்கும் தெரியாமல் காட்டில் காய்ச்சிய கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு தன்னுயிரை நெருப்பு விருந்தாக படைத்தான் சேகர்.
விசயம் கேள்விபட்டு ரத்தினசாமி வந்து துக்கம் விசாரிச்சுட்டு உதவிக்கு பணமும் கொடுத்துவிட்டு சென்றார்.
அன்று சென்றவர் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் வந்திருக்கிறார். ஃபோனில் மட்டும் தொடர்பு இருந்தது. ஆறு மாதத்திற்கு முன்பு வரை)
திடீரென்று சுய நினைவுக்கு வந்தவராய், " ஆமாத்தா. பொண்ணு எங்க காணோம். இது சின்னவன் தானே" என்றார்.
"அவ இன்னும் தூங்கி எந்திரிக்கலைங்க. இன்னைக்கு லீவு தானனு நானும் எழுப்பல. பெரியவன் ஆட்டை எடுத்துகிட்டு காட்டுக்கு போயிட்டானுங்க மாமா" என்றாள்.
இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் வேளையில் சின்னவன் காபி போட்டு எடுத்துட்டு வந்தான்.
"காப்பி எடுத்துக்குங்க" என்று நீட்டியவனை பார்த்தார். புன்சிரிப்புடன் எடுத்துக்கொண்டவர் அவனை அழைத்து அருகில் அமர வைத்து நெற்றியில் முத்தமிட்டார்.
குழந்தைகள் மூவருக்கும் தெரிந்த ஒரே சொந்தம் பெரியப்பா ரத்தினசாமி மட்டும் தான். தெய்வானையின் முகம் கூட யாருக்கும் தெரியாது.
"பசங்கெல்லாம் என்னாத்தா படிக்கிறாங்க" என்றவுடன்,
" பெரியவன் இந்த வருசம் 12. சின்னவன் 10. வாண்டு ஏழாவதுங்க மாமா. ஏதோ கவர்மெண்ட் பள்ளிக்கூடம் அப்படிங்கறதால ஓடுதுங்க. இதுக்கே நோட்டு பேனா அது இதுன்னு இந்த டீச்சருங்க வாங்க சொல்றாங்க. எப்படியோ ஓட்டிட்டு இருக்கேனுங்க" என்று தன் வாழ்க்கை புலம்பலை சொல்லிக்கொண்டு இருந்தாள்.
"ஏத்தா. இங்க எல்லாத்துக்கும் கஷ்டமா இருக்கும் போல. பேசாம பக்கத்து ஊருக்கோ இல்லனா இன்னும் கொஞ்சம் தள்ளி போயி இருந்துக்கலாம்ல. பொட்ட புள்ளைய வச்சிட்டு ஏன் இங்க இப்படி கஷ்டப்படுற" என்றவரிடம்,
"இங்க இருந்தே பழகிப்போச்சு. ஆடுகள மேய்ச்சலுக்கு எங்க வேணும்னாலும் ஓட்டிட்டு போலாம்.அதவிட அந்த மனுசன் வாழ்ந்த இந்த வீட்ட விட்டு போக மனசு வர மாட்டீங்குதுங்க மாமா" என்று மீண்டும் கண்களில் நீர் வர சொன்னாள்.
அப்போது அவளின் மகள் பூவிழி கண்களை தேய்த்துக்கொண்டு வெளியே வந்தாள்.
"இங்க பாரு. பெரியப்பா வந்து இருக்காங்க" என்று கனகா சொல்ல பூவிழிக்கு ஒன்றும் புரியவில்லை. அவரின் முகம் அவளுக்கு பரிச்சயம் இல்லை. அவளை அழைத்து தன் மடியில் வைத்து கொண்டு வந்த பலகாரத்தை கையில் கொடுத்தார்.
கனகா, "மாமா இருந்து சாப்டுட்டு தான் போகனும். கோழி அடிக்கவா? இல்லனா உப்பு கண்டம் இருக்கு. அது போடவா? " என்றவளை பார்த்து, "எனக்கு வயசாகிடுச்சுத்தா. ரசம் இருந்தா போதும்" என்றார் நரைமுடி எய்திய கிழவனாய்.
காலை 10 மணிக்கெல்லாம் உணவு தயாராகி விட , "டேய் சின்னவனே. கிழக்க போனா பெரியவன் இருப்பான். சாப்பிட கூட்டிட்டு வா. அப்படியே ஆட்டையும் ஓட்டிட்டு வரச்சொல்லு. யாவாரி குட்டி புடிக்க வாரதா சொன்னாங்க " என குமரேசனை அனுப்பிவைத்தாள்.
சின்னவாண்டு பூவிழி உடன் விளையாடிக்கொண்டிருந்தார் ரத்தினசாமி.
"ஏனுங்க மாமா. சாப்பிடலாமுங்க. வாங்க" என்று அழைக்க, கை கழுவிட்டு வந்து அமர்ந்தார்.
அந்நேரத்தில் கனகாவின் மூத்த பிள்ளை நந்தகுமாரும் வந்து சேர்ந்தான்.
ஆடுகளை குடிசைக்குள் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வந்தான். தன் தகப்பனை உரித்து வைத்தது போல் 6 அடி உயரத்தில் விரிந்த மார்புடன் திடமான புஜங்களுடன் வந்து நின்றான்.
"பெரியப்பா எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? ரொம்ப இளச்சிட்டீங்க போல" என்றான் மூத்த மகனுக்கு இருக்கும் அதே பொறுப்புகளோடு.
"நல்லா இருக்கேன்டா தங்கம். அப்படியே உங்க அப்பன உரிச்சு வெச்சிருக்க. விசாரிக்கறது கூட அவன மாதிரியே இருக்கு" என்று அழைத்து தன் பக்கத்தில் அமர வைத்துக்கொண்டார்.
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அவர்கள் வீட்டில் உறவினருடம் மகிழ்ச்சியான உணவை உண்ணுகிறார்கள். தன் குடும்பத்தைச் சேராத ஒருத்தர் அந்த வீட்டில் சாப்பிட்டார் என்றால் அது அவர் மட்டும்தான்.
சாப்பிட்டு முடித்துவிட்டு திண்ணையில் வந்து அமர்ந்து ரத்தினசாமியை பார்த்து, "மாமா கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. இத்தனை வருஷம் கழிச்சு வந்து இருக்கீங்க! ஏதாவது காரணமாகத்தான் வந்தீங்களா? இல்ல சும்மா பாத்துட்டு போலாம்னு வந்தீங்களா?" என்று கேட்டாள் கனகா.
அதற்குள் வியாபாரிகள் இரண்டு பேர் வந்து ஆடுகளை பார்த்துவிட்டு விலைபேசினார்.ஆறுமாத இரண்டு ஆட்டுக்குட்டிகளை பிடித்துவிட்டு 7500ரூபாயை பேரம்பேசி கொடுத்துவிட்டு சென்றனர்.
"மாமா கோச்சுக்காதீங்க. பேச யாவாரி வந்துட்டாங்க. பேச முடியல. சொல்லுங்க மாமா" என்றாள்.
சில நிமிட அமைதிக்குப் பிறகு அவளின் முகத்தை பார்த்து, "உன்கிட்ட ஒரு சகாயம் கேட்கலாம்னு தான் வந்தேன். ஆனா நீ இப்படி கேட்கறதுன்னு தான் தெரியாம உக்காந்துட்டு இருக்கேன்தா" என்றார் தயங்கியபடி.
"என்னங்க மாமா சொல்றீங்க? உங்களுக்கு என் கிட்ட இருந்து சகாயமா? விளையாடாதீங்க மாமா" என்றாள்.
"விளையாடல்லத்தா. நெசாம ஒரு சகாயம் கேட்கலாமுனு தான் வந்தேன்" என்றார்.
"இந்த சிறுக்கிகிட்ட இருந்து சகாயமா? எனக்குன்னு இருக்கற உறவு நீங்க தான். திக்கு தெரியாம நின்னப்போ எங்களுக்கு உதவி செஞ்சு இத்தனை வருஷம் பார்த்ததும் நீங்கதான். என்னன்னு சொல்லுங்க மாமா" என்றாள்
வார்த்தைகளை சொல்ல முடியாமல் தொண்டைக்குள்ளேயே மென்று மீண்டும் உள்ளேயே கிரகித்துக் கொண்டார்
"மாமா தயங்காம கேளுங்க. நீங்க எங்களுக்கு பண்ணின உதவிக்கு உயிரை கேட்டா கூட நான் கொடுக்க தயாரா இருக்கேனுங்க" என்றாள்.
ஆனால் அவளுக்கு தெரியாது அவர் கேட்க இருக்கும் அந்த உதவியின் விபரீதத்தை.
தன் மனைவி தெய்வானை சொல்லிய அனைத்தும் அவரது மூளையில் மத்தளம் போல தட்டிக் கொண்டே இருந்தது. ஆனால் அவர் தொண்டைக்குழிக்குள் ஒரு பிரசவமே நடந்து கொண்டிருந்தது.
எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் அந்த உதவியை கேட்க முடியவில்லை.
"இல்லத்தா. அடுத்த முறை வரும்போது கேட்கிறேன்" என்று சொல்ல,
"மாமா மறுபடியும் சொல்றேன் தயங்காம கேளுங்க. இப்போ போயிட்டு நீங்க மறுபடியும் எப்போ வருவீங்கனு தெரியல. அதனால இப்பவே கேட்டுருங்க மாமா. ஏதோ நன்றிகடனை தீர்த்த மாதிரி ஒரு நிம்மதியாவது எனக்குள்ள இருக்குமுங்க" என்று துடித்தாள்.
ஆனால் ரத்தினசாமிக்கு தெரியும். கேட்டால் அவளின் உயிர்நாடியே துடிக்கும் என்று.
"விடுத்தா. ஒரு மாசம் கழிச்சு தெய்வானையையும் கூட்டிட்டு வாரேன். அப்போ கேட்கிறேன். இப்ப கேட்கவும் மனசு இல்ல. இப்ப கேட்டாலும் சரி வராது. அதனால அடுத்த முறை வரும்போது கட்டாயம் கேட்கறேன்" என்று பேச்சை முடிக்க, அவளும் அதற்கு மேல் வற்புறுத்த முடியாமல் அமைதியாக இருந்துவிட்டாள்.
"சரித்தா. நானும் அப்படியே கிளம்பறேன். நேரம் போச்சுன்னா வெயிலுல நடக்க முடியாது" என்று சொல்ல,
"இத்தனை வருஷம் கழிச்சு வந்து இருக்கீங்க. மதியமும் இருந்து ஒரு வாய் சாப்டுட்டு போலாமுங்களே" என்றாள் ஏக்கத்துடன்.
சொந்தங்கள் யாருமே வராத அந்த வீட்டில் அவர் வந்தவுடன் செல்வது அவளுக்கு மனதில் பாரத்தை ஏற்படுத்தி இருந்தது. அதை ரத்தினசாமியும் அறிவார்.
"அடுத்த முறை வரும்போது போது ரெண்டு நாளு தங்கிட்டே போறேன்" என்று சொல்லிவிட்டு அவளின் கையில் துண்டு சுத்திய மஞ்சள் பை ஒன்றை திணித்தார்.
" இதெல்லாம் வேணாமுங்க மாமா. உங்க உறவு இருந்தாலே போதுமுங்க" என்றவளிடம்,
"அட புடித்தா. பசங்களுக்கு நல்ல துணிமணி எடுத்துகொடு. புடுச்சத வாங்கி கொடு. புள்ள பெரிய மனுசி ஆனா செலவு செய்யனும். புள்ளைக்கு ஏதாவது நகை வாங்கி வை. பின்னாடி கட்டிக்கொடுக்கனும்ல" என்று சொல்லி அவளின் வாயடைத்தார்.
அவரின் சொல்லில் உண்மை உள்ளதால் அவளால் அதை திருப்பி கொடுக்கவும் முடியவில்லை.
வீட்டுக்குள் சென்றவள் பையை அவள் கணவன் ஃபோட்டோ முன் வைத்துவிட்டு, இன்னொரு பையை எடுத்து வந்தாள்.
"மாமா இது புடிங்க. நேத்து அதிரசமும் முறுக்கும் செய்தேன். அக்காவுக்கு கொண்டு போயி கொடுங்க" என்றதும் மறுப்பு ஏதும் இல்லாமல் வாங்கிக்கொண்டார்.
பூவிழியின் நெற்றியிலும், குமரேசன் நெற்றியிலும் முத்தத்தை பதித்துவிட்டு டாடா காட்டி கிளம்ப தயாரானார்.
"பெரியவனே. சைக்கிள்ல கொண்டு போயி பெரியப்பாவ பஸ் ஏத்திவிட்டுட்டு வா.மெதுவா போகனும்டா சைக்கிள்ல" என்று சொல்லி அவரை வழியனுப்பி வைத்தாள்.
கண்ணில் இருந்து மறையும் வரை அவளும் அவரை பார்த்துக்கொண்டு இருந்தாள். அவரும் தவிப்புடன் ஏக்கத்துடன் வீட்டை நோக்கி பார்த்துக்கொண்டே வலியுடனும் ஏமாற்றத்துடனும் சென்றார்.
பஸ் ஸ்டாப் வந்தவுடன் அங்கிருந்த ஒரு பொட்டிகடையில் மிட்டாய்களை வாங்கி கொடுத்தார் நந்தகுமாரிடம்.
"நல்லா படிக்கறியாப்பா?" என்று கேட்க, "நல்லா படிக்கறேன் பெரியப்பா" என்றான்.
சில நிமிடங்கள் உரையாடல் தொடர பேருந்தும் வந்தது அதற்கும் முற்றுப்புள்ளி வைக்க.
பேருந்தில் ஏறி ஜன்னல் இருக்கையில் அமர்ந்து டாட்டா காட்ட புன்சிரிப்புடன் தன் கைகளை அசைத்தான் நந்தகுமார்.
பேருந்தும் புறப்பட பெருமூச்சை பரவவிட்டார் ரத்தினசாமி. குருட்டு தைரியத்தில் வந்தவருக்கு விழிகள் இருண்டே போயிருந்தது திரும்பும் போது.
வீட்டுக்கு சென்றால் தெய்வானையிடம் என்ன சொல்வது? அவள் என்ன சொல்லுவாள்? என யோசித்து கொண்டே பொட்டல் காடுகளை பார்த்து சோகத்துடனே நினைவுகளை அசைப்போட்டார்
4 மணியை கடிகாரத்தில் சின்னமுள் நெருங்கும் வேளையில் வியர்வை துளிகளுடன் வீட்டிற்குள் வந்தார் ரத்தினசாமி.
"தெய்வானே... தெய்வானே... கொஞ்சம் தண்ணி கொண்டு வா.." என்ற குரல் கேட்டதும் மெல்ல மெல்ல நடந்து தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தாள் அவரின் அன்பு மனைவி.
ஃபேன் காற்றில் கொஞ்சம் இளைப்பாற அமைதியாய் அமர்ந்து இருந்தார். அடுப்பில் அவருக்கு காபியும் தயாராகியது.
காபியை கையில் கொடுத்துவிட்டு, போன காரியம் என்ன ஆனது என்று கேட்பாளே. அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தார் பொறுப்புள்ள கணவனாக.
அவர் நினைத்தது போலவே காபியை கையில் கொடுத்தவள் அதை அவர் வாயில் வைக்கும் முன்பே " போன காரியம் என்ன ஆச்சு? கனகா என்ன சொன்னா?" என்று கேட்டாள் தெய்வானை.
தன் கையில் இருந்த காபி டம்ளரை அப்படியே கீழே வைத்துவிட்டு, " நான் அவகிட்ட இதபத்தி எதுவும் பேசல" என்றார்.
"ஏன்" என்ற அவளின் அடுத்த கேள்விக்கு, "நான் எவ்வளவோ முயற்சி பண்ணி பாத்தேன். ஆனா வார்த்தை தொண்டகுழி தான்டி வெளிய வரவே மாட்டிங்குது தெய்வான" என்றார்.
"நீங்க எந்த வேலையத்தான் சரியா செஞ்சு இருக்கீங்க. வயசான காலத்துல உங்ககூட இப்படி மாரடிக்கனும்னு என் தலையெழுத்து" என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு செல்லும் போது "இந்த மனுசன கட்டிக்கிட்டு என்னத கண்டேன். கடைசி வரைக்கும் உருப்படியா ஒன்னத்தையும் காங்கல" என முனகியபடியே அறையில் சென்று படுத்துகொண்டாள்.
"எல்லாம் கேட்டவராய் எதுவும் பேசாமல் ஹாலில் இருந்த கட்டிலில் அப்படியே சாய்ந்து ஃபேனை பார்த்தவாறே படுத்திருக்க அவரின் இரு கண்களின் ஓரமும் தண்ணீர் வடிந்து காதுகளை தொட்டது.
இந்த நிலைக்கு காரணம் அவரின் கடந்தகாலத்தில் நடந்த அந்த ஒற்றைச் சம்பவம் தான்.
அவர்களின் மொத்த வாழ்க்கையையும் திருப்பிப் போட்டது அந்த சம்பவம்.இன்று இவர் இந்த நிலைக்கு வர காரணம் அந்த சம்பவமும் அந்த நபரும் தான்.
ஆம்... அந்த நபர் அவரின் மகன் சண்முகசுந்தரம் தான். ரத்தினசாமி தெய்வானைக்கும் பிறந்த ஒரே மகன் சண்முகசுந்தரம்.
ரொம்ப சுறுசுறுப்பாவன். நன்றாக படித்தவன். படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் சிறந்து விளங்கியவன். அந்த காலகட்டத்தில் ரத்தினசாமி ஊட்டியில் வேலை பார்த்து கொண்டிருந்ததால் அந்த ஊரின் முக்கிய விளையாட்டான கால்பந்தில் சிறந்து விளங்கினான் சண்முகசுந்தரம்.
சண்முகசுந்தரதிற்கு 19 வயதில் அவர் வசித்த பகுதியில் ஏற்பட்ட விபத்தில் தன்னுடலை மண்ணுக்கு உரமாக்கிக் கொண்டான் அவன்.
அவன் இறப்பிற்கு அரசாங்கம் கொடுத்த நிதி உதவியும், அவன் பெயரில் இருந்த இன்சுரன்ஸ் பணமும் ரத்தினசாமி கிடைத்தது.
என்னதான் பணம் கிடைத்தாலும் தன் உயிருக்கு உயிராய் வளர்த்த மகனின் இழப்பு அவர்களின் வாழ்வில் நீங்காத வடுவாய் அமைந்துவிட்டது.
மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்ளும் வலிமை அவர்களது உடலில் இருந்தாலும் மனதில் அந்த எண்ணம் அவர்களிடத்தில் துளியும் வரவில்லை.
சண்முகசுந்தரத்தின் இறப்பால் வந்த பணத்தில் தனது சொந்த ஊரில் மூன்று வீடுகள் கட்டினார். அதில் தற்போது 2 வீடுகள் வாடகைக்கு விட்டுள்ளார். தன் சொந்த ஊருக்கு வந்து செருப்பு கடை வைத்து இன்று தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார் அந்த முதியவர் ரத்தினசாமி.
இத்தனை ஆண்டுகள் தனிமரமாக வாழ்ந்தவர்களுக்கு முதுமை மிகப்பெரிய நரகமாய் அமைந்துவிட்டது.
நடை தளர்ந்து உடலும் வலிமை இழந்து கைகளும் நடுங்க ஆரம்பித்துவிட்ட நிலையில் இன்று அவர்களுக்கு ஒரு துணை தேவைப்படுகிறது.
தன் மகன் உயிரோடு இல்லையே என்ற ஏக்கம் கடந்த சில வருடங்களில் மிக அதிகமாக அவர்களுக்கு இருக்கிறது.
#முதுமை கொடியது. அதனினும் கொடியது முதுமையில் தனிமை...
வேகமாக நடக்க முடியவில்லை. வண்டியை ஓட்ட முடியவில்லை. சின்ன சின்ன விஷயத்திற்கும் அடுத்தவர்களின் துணை அடிக்கடி தேவைப்படுகிறது.
இந்த காரணத்திற்காகத் தான் இன்று அவர் கனகாவின் வீட்டிற்குச் சென்றார்.
உன்னுடைய ஒரு மகனை எனக்கு தத்து கொடு. எங்கள் உயிர் இருக்கும் வரைக்கும் அவன் எங்களோடு இருக்கட்டும். அவனை நன்றாக படிக்க வைத்து எங்கள் சொத்தையும் அவன் மேல் எழுதி வைத்து விடுகிறோம் என்று தன் முதுமையை கடக்க விலைபேசத்தான் சென்றார்.
மற்றவர்களுக்கு அது விலையாக தெரிந்தாலும் அவர்களுக்கு வலிகளின் மருந்தாக தான் இருக்கும்.
தன் தம்பி சேகர் இறந்தவுடன் கனகாவை தங்கள் வீட்டிற்கு வந்து தங்கி விடும்படி கேட்டார்.
ஆனால் கனகாவோ " என் வீட்டுக்காரர் உடம்பை தான் அனாதை பிணம்போல சொந்த பந்தங்கள் இல்லாம தூக்கிபோட வேண்டியதா போச்சு. எங்களுக்கு உதவப்போயி உங்களுக்கு அந்த நிலைமை வந்திட நாங்கள் காரணமாக இருக்கக்கூடாதுங்க மாமா" என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டு வர மறுத்துவிட்டாள்.
அவளை அனைவருக்கும் தெரியும். அவள் பிள்ளைகளை யாருக்கும் தெரியாது. அதனால் ஒருவரை தத்தெடுத்து வந்துவிட்டால் ஊராரிடம் வேலைக்கு ஆள் வைத்ததாக சொல்லிவிடலாம். அவளுக்கும் உதவியது போல் இருக்கும். தங்களுக்கும் ஒரு ஆதரவு கிடைத்தது போல் இருக்கும் என்று கணக்கு போட்டு தான் சென்றார் இன்று.
என்னதான் முடிவு செய்தாலும் அவரால் அது கேட்க முடியவில்லை. காரணம் மகனின் பிரிவு எவ்வளவு கொடுமையானது என்று அவர் அறிவார்.
அதைவிட முக்கியம் அங்கு நடந்த மற்றொரு நிகழ்வு தான்.
ஆடுகளை வியாபாரிகள் கையில் வாங்கியவுடன் குட்டிகள் இரண்டும் கத்த தொடங்கியது. அதை கண்ட தாய் ஆடும் சத்தமாக "ம்ம்மேமேமேமே.... ம்ம்மேமேமே..." என்ற அனத்தியது. அதை கண்ட மற்ற ஆடுகளும் துள்ளின.
இரண்டு குட்டிகளும் வீட்டை நோக்கி துள்ளிவர பாய்கிறது. ஆனால் கழுத்தில் கட்டிய கயிறுகளோ அதற்கு தடையாகி போயின. குட்டிகளும் தோற்றன. குடிசையும் தோற்றது.
வியாபாரிகள் குட்டியை வண்டியில் வைத்துக்கொண்டு செல்ல கண்களில் ஈரத்துடன் பார்த்திருந்தால் கனகா.
ஆடுகள் மறைந்தபின்னும் அருகில் இருந்த பனை மரத்தின் உச்சியில் வீட்டில் இருக்கும் ஆடுகளின் சப்தம் ஒலித்துக்கொண்டே தான் இருந்தது சில நிமிடங்கள்.
கண்களை தன் முந்தானையில் துடைத்துவிட்டு திரும்பியவளின் அருகில் நின்று அவளை குறுகுறுவென பார்த்த குமரேசனிடம், "என்னடா? அப்படி பாக்கற?" என்று கேட்டாள்.
"அடிக்கடி வந்து ஆட்ட புடிச்சுட்டு போறாங்க.ஒவ்வொரு தடவ ஆடும் போகும் போது இப்படி இங்க நின்னு பாத்து பாத்து அழுவுற.அப்புறம் கண்ண தொடச்சிட்டு வந்து டயலாக் பேசுற அப்படி வளர்த்தன் இப்படி வளர்த்தேனு. போம்மா... பெரியப்பா காத்துக்கிடக்காரு. போயி பேசு" என்று கிண்டல் செய்தான்.
அவனை விளையாட்டாக அடிக்க கைகளை ஓங்க ஓடிச்சென்றான் ரத்தினசாமியிடம். "அப்படியே உங்க அப்பன மாதிரியே பேச்சு" என்று சொல்லிக்கொண்டு ரத்தினசாமி அருகில் அமர்ந்தவள்.
"பாத்தீங்களா மாமா இவன் பேசறத. அஞ்சு அறிவு படைச்ச ஆடுக கூட தன் குட்டியை பிரியும் போது அப்படி கதறுது. தன் கூட்டத்தில இருந்து ஒரு ஆள யாரோ தூக்கிட்டு போறாங்கனு துள்ளுது. பாசம்னு வந்துட்டா எல்லா தாய்க்கும் பிள்ளைய பிரியறதே வலிக்க தானே செய்யும்" என்று பெருமூச்சு விட்டாள்.
"போற ஆட்டுக்குட்டிக்கும் தன் இனத்த விட்டு இடத்த விட்டு யாரோ நம்மல பிரிச்சு கொண்டு போறாங்களேன்னு வலிக்கும். செத்தா கூட இந்த அளவுக்கு வலிக்காது. உயிரோட பிரியற வலி கொடுமையானதுங்க மாமா" என்று அவள் முடித்தாள்.
அந்த சொல் ரத்தினசாமியின் இதயத்தில் பேரிடியாக விழுந்தது. தான் கேட்க வந்ததை அறிந்தால் அவள் இதயம் நொறுங்கிவிடும் என்பதையும் உணர்ந்தார்.
"மாமா கோச்சுக்காதீங்க. பேச பேச யாவாரி வந்துட்டாங்க. பேச முடியல. சொல்லுங்க மாமா" என்றாள்.(**இந்த வரிகளை ஏற்கனவே படித்து இருப்பீர்கள். மீண்டும் ஒரு இந்த வரிகளில் இருந்து ஒருமுறை ரத்தினசாமியுடன் தொடர்ந்து பாருங்கள். அவரின் வலிகள் புரியும்)
அந்த வலிகள் தான் தற்போது அவர் கண்களில் நீராய் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நடந்தவை என்ன என்று தெரியாமல் அறைக்குள் "தன் மகன் இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா?" என்று குமுறிக்கொண்டு அழுதாள் இந்த கிழவனின் மனைவி தெய்வானை.
வலிகள் ஆறாமல் அழுதுகொண்டு இருக்கும் வேளையில் அவர் குடிக்காமல் இருந்த காபி கட்டில் காலின் அருகில் ஆறி இருந்தது...
பிள்ளையை இழந்த பெற்றோரின் வாழ்க்கை அந்த நிமிடம் முதல் நரகம் தான் போல....
- சேதுபதி விசுவநாதன்
You do not have the required permissions to view the files attached to this post.