எல்லோர் முன்னிலையிலும் திட்டியதால் அவமானத்தில் கூனிக் குறுகிப் போய் நின்றவள் அந்தக் கூட்டத்தில் யாரேனும் ஒருவராவது அவளுக்காக பேசுவார்கள் என்று லேசாக முகத்தை உயர்த்தி பார்த்தவள் அடுத்த நொடியே தன்னுடைய முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டாள்.
'திருமணமாகி இந்த ஆறு மாதத்தில் நடக்காத அதிசயம் இப்போது மட்டும் நடந்து விடப் போகின்றதா என்ன? நிச்சயம் வாய்ப்பு இல்லை .'
அவளது கணவனுக்கு எதிராக அந்த வீட்டில் யாரும் மூச்சுக்கூட விட மாட்டார்கள் என்ற நிலை இருக்கும் போது அவளுக்காக யாரேனும் பரிந்து பேசி விடுவார்களா என்ன ? வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்தவள் உள்ளுக்குள் மறுகினாள் .
கண்களை விட்டு வெளியே வரத் துடித்த கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டவள் வேகமாக எழுந்து கிச்சனை நோக்கி சென்றாள்.
எதையோ சொல்வதற்கு அவளது உதடுகள் துடித்தன. வார்த்தைகள் வெளியே வரவில்லை. வந்தாலும் பயனில்லை என்பதை இத்தனை நாட்களில் அவள் தெரிந்து கொண்டிருந்தாள்.
முதல் நாள் சண்டையின் பொழுது அவன் பிடித்து முறுக்கிய கைகள் இன்னும் வீக்கத்துடன் இருக்க வலது கையால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை அவளால் . ஆனால் அதை ஒரு காரணமாகச் சொல்லி யாரிடமும் எந்த உதவியும் அவள் எதிர்பார்த்து விட முடியாது 'வேலை செய்யாமல் இருக்க இது ஒரு நொண்டி சாக்கு' என்று முதல் அம்பு தன்னுடைய கணவனிடம் இருந்து வரும் என்பதை அறிந்து கொண்டவள் பல்லை கடித்துக்கொண்டு எல்லா வேலையும் செய்து கொண்டே இருந்தாள் ஓய்வின்றி. உடல் ஓய்வுக்கு கெஞ்சியது . காலையிலிருந்து இன்னும் அவள் உணவு உண்ணவில்லை. மயங்கி விழப் போகிறோம் என்பது அவளுக்கு தெரிந்தாலும் அதற்காக வேலையை நிறுத்தவில்லை … நிறுத்தாமல் செய்து கொண்டே இருந்தால் ஒருவித பிடிவாதத்துடன் .
மணி மூன்றை கடந்திருந்தது உடல் ஓய்வுக்காக கெஞ்சியது. பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்திருந்தது. இன்னமும் அவளது வேலைகளும் முடிந்த பாடில்லை. அவளது அருமை கணவன் அகத்தியனும் வந்தபாடில்லை.
அவனுடன் அமர்ந்துதான் அவள் உணவு உண்டாக வேண்டும். இல்லை என்றால் அடுத்தவேளை உணவு உண்ண அவளது கைகள் நேற்றைப் போலவே அவனால் உடைத்து வைக்கப்பட்டிருக்கும் என்பது அவள் நன்கு கற்ற அனுபவ பாடம் என்பதால் அவனுக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.
நிதானமாக 4 மணிக்கு வீட்டிற்கு வந்தவன் பார்த்தது மாடிப் படிக்கட்டுகளில் நடந்து வந்தபடியே மயங்கி விழும் துளசியைத் தான். கண்கள் சொருகும் அந்த கடைசி நொடியில் கூட கணவனின் முகத்தில் ஏதேனும் இளக்கம் தென்படுகிறதா என்பதை பார்த்தாள் துளசி.
கல் கல்லாகவே இருந்தது.
துளசி காதுகளில் கடைசியாக விழுந்தது வீட்டிற்கு வந்த யாரோ ஒரு உறவினரின் குரல் தான்.
"அய்யோ… பிள்ளைதாச்சி பொண்ணு மாடிப்படியிலிருந்து விழப் போறா... யாராவது ஓடிப்போய் பிடிங்க" என்பதுதான் அந்தக் குரலை செவியுற்றபடியே மயங்கி சாய்ந்தாள் துளசி.
போர் அடிக்குது... டீசர் போட்டு வெறுப்பேத்துவோம்