மாயா!...

Moderator: Kaayaampoo

Post Reply
Kaayaampoo
Moderators
Posts: 13
Joined: Sat May 16, 2020 9:19 am

மாயா!...

Post by Kaayaampoo »

“இப்போ நாம எங்க போயிட்டிருக்கோம்?..”
அவன் பதில் கூறாது புன்னகைத்தான்…
வழக்கம் போல அவன் சிரிப்பில் தொலைந்த தன்னை வேண்டா வெறுப்பாக மீட்டெடுத்தாள் அவள்.
சிலுசிலுவென தேகத்தை தீண்டிச் செல்லும் காற்று, ஓங்கி உயர்ந்த மலைகள், மலைகளை மறைத்துக் கொண்டு அடர்ந்து காணப்படும் பச்சை பசும் மரங்கள், வளைந்து வளைந்து செல்லும் பாதையென காணும் யாவுமே மனதுக்கினியவனின் அண்மையில் அழகானதாய் தோன்றியது அவளுக்கு..
பார்வையை அவன் புறம் செலுத்தினாள்.
ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடியே மகிழுந்தை ஓட்டிக் கொண்டிருந்தான் அவன்.
இவன் என்ன செய்தாலும் ரசிக்கிறேனே!.. நாள் ஆக நாள் ஆக இவனை இன்னும் பிடிச்சுட்டே போது… ஒரு வேளை இது தான் காதலோ?..
சட்டென்று மகிழுந்து நின்றது…
ஒரு விநாடிக்குள் இயல்பிற்கு திரும்பியவள் அவனைப் பார்த்தாள்.
“ஜஸ்ட் அ மினிட்.. பிஸ் பிஸ்” என்றவாறு ஒரு விரலைக் காட்டினான்.. அவள் சரி என்பது போல தலையை ஆட்டினாள்.
அவன் சென்று பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகியும் வராதது அவளைக் கலக்கமடையச் செய்தது. அவன் அலைபேசிக்கு தொடர்பு கொள்ளலாம் என்றால் சிக்னல் கிடைக்கவில்லை.. இறங்கிச் சென்று பார்க்கலாமா வேண்டாமா என்ற போராட்டத்தில் மேலும் பத்து நிமிடங்கள் கடந்தது. இறுதியில் மகிழுந்தை விட்டு கீழே இறங்கினாள்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் எந்த திசையிலும் அவனைக் காணவில்லை. அவன் மட்டுமல்ல வேற்று மனிதர்கள் கூட யாரும் தென்படவில்லை..
“சிவா.. சிவா.. எங்க இருக்கீங்க?.. சிவா.. கேட்குதா..?” என்றவாறு முன்னேறினாள்.. உள்ளே செல்ல செல்ல அதிகரித்த மரங்களின் அடர்த்தி சூரிய ஒளியை உள்ளே வரவிடாமல் தடுத்தது. பட்ட பகலிலேயே அந்தி மாலை வேளையைப் போன்று காணப்பட்டது. உள்ளே காணபட்ட இருள் திகிலைக் கொடுத்த போதும் மனதினுள்ளே புதைந்த காதல் ஓரளவு முன்னேறிச் செல்வதற்கான தைரியத்தைக் கொடுத்தது. அலைபேசியில் உள்ள விளக்கை உயிர்ப்பித்தாள். அது போதுமான வெளிச்சத்தைக் கொடுத்தது.
அவனை அழைத்தபடியே சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். ஓரறிவு உயிர்களான மரம், செடி, கொடிகளைத் தவிர வேறு எதுவும் தென்படவில்லை. ஆள் அரவம் அற்ற காட்டுப்பகுதிக்குள் தான் மட்டும் தனித்து விடப்பட்டதைப் போல் உணர்ந்தாள்.
“மாயா… மாயா… மாயா…”
அந்தக் காட்டுப்பகுதி முழுவதும் அவளது பெயர் எதிரொலித்தது. மனித குரல் போல் அல்லாது வினோதமாக இருந்தது அந்த ஒலி… ‘ஒரு வேளை இது தான் அசரிரீ என்பதோ?.. ஆனால் அசரிரீ என்றால் மேலே ஆகாயத்திலிருந்து அல்லவா ஒலி வர வேண்டும்.. இது அப்படி இல்லையே!...’ என்று எண்ணியவாறு ஓசை வந்த திசை நோக்கி நடந்தாள்.
திடீரென்று மேல் திசையிலிருந்து ஒன்று அவள் மேலே விழ திடுக்கிட்டு அலறினாள். பயத்தில் அவள் குதித்ததில் கையிலிருந்த அலைபேசி கீழே விழுந்து தெறித்தது. தன் மேலே விழுந்ததை உதறித் தள்ளினாள். கீழே விழுந்த முயல் துள்ளிக் குதித்தோடியது. சென்ற உயிர் மீண்டும் வந்தது போன்று உணர்ந்தாள். கண்களை மூடி சில விநாடிகள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள். பின் கீழே விழுந்த அலைபேசியை எடுத்து இயக்கினாள். அது தனது உயிரை விட்டிருந்தது. இதற்கு மேலும் அவனைத் தேடிச் செல்லும் தைரியம் தனக்கில்லை என்றெண்ணி வெளியே செல்ல சில அடிகளை எடுத்து வைத்தவள், ‘அவனில்லாமல் எவ்வாறு செல்வது?.. வெளியே சென்றாலும் உதவி கேட்க கூட ஒருவருமில்லையே!..’ எனத் தோன்றியவளாய் அப்படியே நின்றாள். பின் ஒரு முடிவுக்கு வந்தவளாய் என்ன நடந்தாலும் பரவாயில்லை, சிவா இல்லாமல் இந்த இடத்தை விட்டு போகக் கூடாது, அவனுக்கு ஒன்னும் ஆகியிருக்காது என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.
“சிவா.. சிவா.. சிவா… நான் பேசுறது கேட்குதா?.. எங்க இருக்கீங்க.. ப்ளீஸ் வந்துடுங்க... சிவா... எனக்கு ரொம்ப பயமாருக்கு” என்று தன்னால் எவ்வளவு சத்தமாக கத்த முடியுமோ அவ்வளவு சத்தமாக கத்தினாள். ஆனால் அவள் குரலுக்கு எதிர்க்குரல் எழும்பவே இல்லை...
‘எங்கே சென்றிருப்பான்?.. அவனுக்கு என்னாச்சு?.. இறைவா எங்களை காப்பாத்து... எனக்கு அவனைத் தேடுற தெம்பையும் தைரியத்தையும் குடு’ என்று கண்களை மூடி பிராத்தித்தாள்.
கண்களைத் திறந்தபோது அவளின் பின்னால் ஆள் நடமாட்டம் இருப்பது போன்று தோன்றியது. அந்தத் திசையை நோக்கி நடந்தாள். அப்போது மேலிருந்து தண்ணீர் போன்று ஏதோ ஒரு திரவம் அவள் மீது சொட்டியது. அதைத் தொட்டு பார்த்த போது பிசுபிசுத்தது. மெல்லிய வெளிச்சத்தில் அது என்னவென்று உற்றுப் பார்த்தவள் அதிர்ந்தாள். ‘இரத்தம்... யாருடையது..?’ அவள் சரியாக மேலே பார்க்கும் நேரத்தில் கீழே விழுந்தான் அவன்... அவளவன்... அவளது ஆருயிர்க் கணவன்.. சிவா..
சில நொடிகள் அதிர்ச்சியில் செயலற்றுப் போனாள் அவள்.. பின் சுதாரித்து அவனைப் பார்த்தாள். அவன் நெஞ்சில் காதை வைத்துப் பார்த்தாள். இதயத்துடிப்பு சீராக இருந்தது. அப்பாடா உயிர் இருக்கு.. ‘இறைவா உனக்கு நன்றி’ என்று மனதுக்குள் இறைவனுக்கு நன்றி உரைத்தவள், எங்கிருந்து இரத்தம் வந்தது என ஆராய முற்பட்டாள்.
சட்டென்று கண்களைத் திறந்த அவன், அவளைக் கீழே தள்ளி அவள் கழுத்தில் தன் கையில் வைத்திருந்த கத்தியால் ஒரே கிழி. எதிர்பாரா நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில் செயலிழந்தவள், ஒன்றும் புரியாது அவனையே பார்த்தாள். அவளால் நடந்ததை நம்ப இயலவில்லை. உயிர் போகும் வலி அவளுக்கு பெரிதாக தெரியவில்லை. தன் காதல், நம்பிக்கை பொய்யான வலி ரணமாக கொன்றது. ‘ஏன் இப்படி செய்தான்?..’ கேட்க நினைத்தாள்.. ஆனால் கேட்க இயலவில்லை. அவனின் செயலுக்கான காரணம் தெரியும் வரையில் தனது உயிர் போவதை அவள் விரும்பவில்லை... அவனை விட்டு பார்வையை விலக்காதவாறு இருந்தாள்.
அவளது இறுதி ஆசையை புரிந்தவனாக, பேச ஆரம்பித்தான் அவன்.
“மாயா.. மாயா... ரொம்ப அழகான பேரு இல்ல?.. பேரு மட்டுமில்ல.. நீயும் அழகி தான்டி.. ஆனால் பாரு உன் நிலைமைய.. ஏன் இப்படி செஞ்சேன்னு புரியலல்ல.. நான் காலேஜ் படிக்கும் போதே ஒரு பொண்ண காதலிச்சேன் மாயா.. எனக்கு அவளை ரொம்பவே பிடிச்சிருந்தது. பட் அந்த பொண்ணு என் மேல பெருசா ஈடுபாடு காட்டல.. நானும் வீட்டுல பார்த்த உன்னையவே கல்யாணமும் செஞ்சுக்கிட்டேன்... அதுக்குன்னு உன்னை பிடிக்காமலாம் உன் கூட நான் வாழல.. எனக்கு உன்னை பிடிச்சிருந்தது மாயா... ஆனால் உன் கெட்ட நேரமோ இல்ல என்னோட நல்ல நேரமோ தெரியல்ல அவள் என் வாழ்க்கைல ரிஎன்டர் ஆகிட்டா... உன்னை எனக்கு பிடிக்கும்தான்.. ஆனால் அதைவிட அதிகமா அவளை எனக்கு பிடிக்கும். நீ அழகின்னா.. அவ பேரழகி.. எனக்கு கல்யாணம் ஆனது அவளுக்கு தெரியல்ல.. ஆரம்பத்துல எனக்கு உன்னையும் விட மனசில்லதான். அவளையும் உன்னையும் சேர்த்தே மெயின்ட்டெயின் பண்ணலாம்னு தான் நினைச்சேன். ஆனா அவ எப்படியோ எனக்கு தெரியல்ல.. நீ ரெண்டே நாள்-ல கண்டுபிடிச்சுட மாட்ட?..”
“சரி உனக்கு அவள் தான் வேணும்னா சொல்லித் தொலைஞ்சிருக்க வேண்டியதானடா.. நான் என் வாழ்க்கைய பாத்துட்டு நிம்மதியா போயிருப்பேனேன்னு நீ நினைக்கிறது எனக்கு புரியுது மாயா.. அப்படி நான் ஏன் பண்ணல தெரியுமா?.. பிகாஸ் ஐ லவ் யூ மாயா.. ஐ லவ் யூ... நீ என்னை விட்டு பிரிஞ்சு வேற யாரோடயாவது உன் வாழ்க்கைய ஆரம்பிச்சிட்டினா..! அதை என்னால தாங்கிக்க முடியாது. உன்னை வேற யாருக்கும் என்னால விட்டுக் கொடுக்க முடியாது மாயா... ஏன்னா உன்னை எனக்கு அந்தளவு பிடிக்கும். நீ கண்ணை மூடிக்கோ.. நல்லா தூங்கு... சரியாடா.. நான் வரட்டா.. லவ் யூ பேபி... டாட்டா”
‘இப்படியுமா சில பிறவிகள்.. அதை விட கொடுமை.. இவனையா இப்படி உருகி உருகி காதலிச்சேன்.. மாயா.. உன்னை விடவும் ஒரு அடி முட்டாள் யாரும் இருக்க மாட்டாங்க.. அவங்கவங்க பண்ண பாவத்துக்கு அவங்கவங்க அனுபவிச்சு தான் ஆகணும் அப்படி தான இறைவா..? நான் என்ன பாவம் செஞ்சேன்னு தெரியல்ல.. என் உயிர் போகப் போகுது.. போகட்டும்... இந்த சைகோகிட்டருந்து அந்த பொண்ணையாச்சும் காப்பாத்து இறைவா’ என்று வேண்டியபடியே கண்களை மூடினாள்.
“ஹே.. மாயா.. மாய்ய்ய்ய்யா”
“ம்ம்.. என்னடா..? எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. கதை எழுதும் போது டிஸ்டர்ப் பண்ணாதன்னு... கேட்கவே மாட்டியா?...”
“ஆமா பெரிய இந்த கதை... கேவலமா எதையாச்சும் எழுதிட்டு கிடப்ப.. அதையும் ஆஹா ஓஹோன்னு புகழ நாலு பேரு... உன்னை எதுவும் சொல்லக் கூடாது. உன் கதையையும் படிச்சிட்டு பாராட்டுறாங்களே அவங்கள சொல்லணும்.. என்னங்கடா உங்க டேஸ்ட்டுன்னு நாலு போட்டா எல்லாம் சரியாகிடும்”
“இங்க பாரு என்னை பத்தி என்ன வேணா பேசு.. என் கதையை பத்தி பேசாதன்னு பல முறை சொல்லிருக்கேன் உனக்கு. சும்மா சும்மா என் எழுத்த கிண்டல் பண்ணினா எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிட்டேன்”
“ஆஹான்.. என்னடி பண்ணுவ.. கோவம் வந்தா என்னடி பண்ணுவ.. பெரிய கவிப்பேரரசின்னு நினைப்பு.. எழுதுறது மொக்கை கதை... இதுல தமிழ் புலவி மாதிரி பில்ட் அப் வேற கொடுத்துக்குவ” என்று அவளை சீண்டியபடியே அவளருகில் வந்து அமர்ந்து அவளை இடித்தான்.
மாயாவிற்கு அவளை மீறி கோவம் வந்தது. அவளது கதைகளை அவன் அவ்வப்போது கிண்டல் செய்வது வழக்கம் தான் என்றாலும் அவன் தன் கதைகளை கிண்டல் செய்யும் ஒவ்வொரு முறையுமே தன்னையும் மீறி கோவம் வந்து விடும் மாயாவிற்கு.. மற்ற விஷயங்களில் மாறி மாறி கிண்டலடித்துக் கொண்டாலும், காலை வாரிக் கொண்டாலும் கதைகளை அவன் கிண்டலடித்தால் மட்டும் மாயாவிற்கு எதிர்த்து நக்கலாக பதிலளிக்க வாய் வராது. கோவம் தலைக்கு மேல் ஏறி விடும். எனவே தன்னை மீறி கத்தி விடுவோமோ என்றெண்ணி அவ்விடத்தை விட்டு அகன்றாள் அவள்.
‘கொஞ்சம் ஓவராத்தான் ஓட்டிட்டோமோ!.. பாவம்... உச்சக்கட்ட கோவத்துல போறா.. உன்னை கூலாக்க மாமா வந்துட்டேன் டார்லிங்.. மாயா.. மை டியர் மாயா..’ என்றழைத்தபடியே அவளிடம் சென்றான் ஆதி என்கிற ஆதிகேசவன்.
“என்ன?” என்றபடி முறைத்தாள் அடக்கப்பட்ட கோவத்துடன்.
“கோவம் வந்தா அடக்கக்கூடாதுன்னு.. ஐய்யய்யோ.. யார் சொன்னதா சொல்றது.. அது யாருன்னா?.. ம்ம்.. வந்து.. எவரோ சொல்லிருக்காரு.. அவரு பேரு எதுக்கு இப்போ.. சொன்ன விஷயத்தை மட்டும் ஃபாலோ பண்ணுவோம்... சரியா... சோ.. கோவத்தை அடக்கக்கூடாது கண்ணம்மா.. கொட்டித் தீத்திடு... அள்ள நான் ரெடி” என்று கண்ணடித்தான்.
கடுப்போடு அவனைப் பார்த்தவள், பின் தன் பார்வையை அவனை விட்டு விலக்கிக் கொண்டாள்.
“சாரிடி மை டியர் பொண்டாட்டி... வேணுனா உன் கோவம் தீர என்னை அடிச்சிக்கோ.. இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டு உட்காராத”
நிஜமாதான் சொல்றியா என்பது போல அவனைப் பார்த்தாள்.
அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய், “சத்தியமாடா” என்றான் அவன்.
பளார் என்ற சத்தத்துடன் ஒரு அடி அவன் கண்ணத்தில் விழுந்தது.
“அடிப்பாவி... கோவம் குறையுமேன்னு ஒரு பேச்சுக்காக சொன்னா இப்படியா அடிப்ப?.. புருசனாச்சேன்னு ஒரு மரியாதை இல்லை?.. கிழவனானோன விழ வேண்டிய பல்லெல்லாம் இப்போவே விழுந்திடும் போல..!”
“அப்படின்னா இனி என் கதையை கிண்டல் செய்யாத... நீ செஞ்சா அப்பறம் சின்ன வயசுலயே நீ பொக்க வாய் கிழவன் மாதிரி ஆகறத யாராலும் தடுக்க முடியாது”
“ஐயோ... இனிமே நீயாச்சு உன் கதையாச்சு.. நான் உன் கதை பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டேன்ப்பா... என்ன அடி... என்ன பெத்த தாயே இவகிட்ட இந்த அடி வாங்க தான் என்னை பாத்து பாத்து வளத்தியா?.. என்னை கொடுமை படுத்துறாம்மா... வலிக்குதே”
“அந்த பயம் இருக்கட்டும்” என்றவள், பின் மனது கேட்காமல், “ரொம்ப வலிக்குதாடா” என்றாள்.
“ஏன்டி கேட்க மாட்ட.. விண்ணு விண்ணுன்னு தெரிக்குது.. இப்ப வரைக்கும் காதுக்குள்ள கொய்ங்-ன்னு சத்தம் கேட்குது... இரு இரு எங்க அம்மாக்கிட்டயே உன்னை போட்டு விடறேன்”
“ஆதி பேபி... அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.. நான் தான அடிச்சேன். உன் மாயா தான.. உம்மா.. இப்போ சரியா போச்சா?”
“இல்லை.. இந்த பக்கமும் வலிக்குது” என்று மற்றொரு கண்ணத்தைக் காட்டினான்.
“டேய்... ஃப்ராடு இந்த பக்கம் தானடா அடிச்சேன்?..”
“அதெல்லாம் தெரியாது.. எனக்கு இந்த பக்கமும் வலிக்குது. இப்போ நீ குடுக்கிறியா?.. இல்ல எங்க அம்மாட்ட பேசிக்கட்டுமா?..” என்றான் அமர்த்தலாக.
“படுத்துறான்... சரி காட்டித் தொலை..”
“என்னது தொலையா?..”
“இல்ல இவ்வளவு தொலைவுல காட்டுனா எப்படி குடுக்க முடியும்?.. பக்கமா வான்னு சொன்னேன்” என்றபடி அவன் முகத்தை திருப்பி மற்றொரு கண்ணத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
பின்பு அங்கு நடைபெற்ற காதல் பரிமாற்றங்களுக்குப் பிறகு, “நாளைக்கு ரெண்டு பேரும் வெளியே போறோம்.. எங்கன்றது சஸ்பென்ஸ்” என்றான் அவன்... அவளும், “டபுள் ஓ.கே.” என்றாள்.
மறுநாள் அவன் மகிழுந்ததை ஓட்ட, இவள் அவனருகில் அமர்ந்து கொள்ள இனிமையாய் தொடங்கியது அவர்களின் பயணம்.
சிறிது நேரம் கேலியும், கிண்டலும், ஊடலும், கூடலுமாய் மகிழ்ச்சியாய் சென்றது அப்பயணம்.
இடையில் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தியவன், “பிஸ்.. பிஸ்.. போயிட்டு வந்துடறேன்.. ஜஸ்ட் அ மினிட்” என்றான் ஆதி.
“இந்த ஆம்பளைங்க மட்டும் எங்க இடம் கிடச்சாலும் வேலைய முடிச்சுக்கிறீங்க.. நாங்க தான் பாவம்.. இந்த சுதந்திரம் கூட எங்களுக்கு இல்ல..”
“ஹா..ஹா.. என்ன இதுலயும் ஆண் பெண் சமத்துவம் பாக்க ஆரமிச்சுட்டிங்களா?..”
“ஆண் பெண் சமத்துவம்-லாம் பாக்கல.. வெளி இடங்களுக்கு போனா சிரமப்படுறது நாங்க தான?..” அதை சொன்னேன்.
“யாரு உங்களை வரக் கூடாதுன்னு சொன்னா?.. வேணும்னா நீங்களும் எங்க வேணாலும் வேலையை முடிச்சுக்கோங்க.. என்ன நீயும் வர்ரியா” என்றான்.
அவள் அவனைப் பார்த்து முறைத்தாள்.
“ஓ.கே.. ஓ.கே.. கூல்.. நான் போயிட்டு வந்துடறேன்...”
“சீக்கிரமா வந்து தொலை.. இல்லனா கொன்னுடுவேன்..”
“போனா வரப்போறேன்.. அங்க என்ன சமையல் செஞ்சு சாப்பிடவா போறேன்?.. பேசுறா பாரு பேச்சு” என்றபடி சென்றான் அவன்..
சென்று வெகு நேரம் ஆகியும் அவனைக் காணவில்லை.
“சமையலா செய்ய போறேன்னு சொல்லிட்டு போனான்... இன்னும் வரான் பாரு எருமை... நான் சீக்கிரமா வான்னு சொன்னதாலயே எங்காச்சும் உக்காந்து லேட் பண்ணிட்டு வருவான். சரியான இம்சை புடிச்சவன்.. எங்கடா போன ஆதி” என்று முணங்கியவாறு அவனின் அலைபேசி எண்ணிற்கு அழைத்தாள். அவனோ அதை மகிழுந்தினுள்ளேயே விட்டுச் சென்றிருந்தான்.
மகிழுந்தை விட்டு கீழே இறங்கியவள் அவன் பெயரைக் கூறி அழைத்துப் பார்த்தாள்.
அவனிடமிருந்து எந்தவொரு பதிலும் இல்லை. சுற்றிலும் ஆள் அரவமற்று இருந்தது அவ்விடம்.
“ஐயோ!.. இதென்ன காடு மாதிரி இருக்கு. உள்ள போகவே பயமா இருக்கே!.. ஆதி!.. டேய்!.. எங்கடா இருக்க?.. விளையாடாம வெளிய வா... உதை வாங்குவ சொல்லிட்டேன்..” என்றவாறு உள்ளே செல்லாமல் கத்தினாள்.
ஆனால் அவன் வந்தால் அல்லவோ!..
சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். உள்ளே காணப்பட்ட ஒளியற்ற தன்மை அவளை அச்சுறுத்தியது. கண்களை மூடி சிறிது நேரம் நின்று தன் கண்களை இருட்டிற்குப் பழக்கப்படுத்திக் கொண்டாள். பின் கண்களை திறந்த போது ஓரளவு பார்க்க முடிந்தது.
“ஆதி... ஆதி... உதை படுவடா... விளையாண்டது போதும்... வெளிய வா ப்ளீஸ்... ஆதி...”
“மாயா... மாயா...” அவ்விடம் முழுவதும் அவள் பெயரே எதிரொலித்தது.
சட்டென்று அவளுக்கு பொறி தட்டியது. ‘இது நான் எழுதுன கதையில நடக்குறது போலவே இருக்கே!.. ஹீரோ ஹீரோயின் கார்ல போவாங்க.. ஹீரோவும் ஆதி போலவே பிஸ் பிஸ்னு சொல்லிட்டு போவான். இது ஏன் எனக்கு முதல்லயே தோணாம போச்சு..? தோணிருந்தா இவனை போகாதன்னு சொல்லிருக்கலாமே!.. இப்போ நான் என்ன செய்ய?.. இது ஜஸ்ட் தற்செயலான விஷயம்-னு எடுத்துக்கிறதா?.. இல்ல இனி நடக்கப் போற எல்லாமே என் கதைல நான் எழுதுனது போலதான் நடக்க போகுதுன்னு எடுத்துக்கிறதா?..’
‘சரி அடுத்து என்னன்னு பாப்போம்.. கதைப்படி அடுத்து முயல் விழணும்.. ஆமா முயல் தான்... சப்போஸ் இப்ப முயல் விழுந்தா என் கதைப்படி தான் எல்லாமே நடக்குதுன்னு எடுத்துக்கலாம். இல்லன்னா ஜஸ்ட் இது மட்டும் ஏதோ கோ-இன்சைட் ஆகிடுச்சுன்னு விட்டுடலாம்...’ என்றெண்ணியவளாய் அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைத்தாள்.
எதிர்பார்த்தபடியே, முயல் ஒன்று அவள் மேலே விழுந்தது. ஓரளவு அதை எதிர்பார்த்திருந்ததால் முயல் விழுந்ததற்கு அவள் திடுக்கிடவில்லை என்றாலும், அவளது கதைப்படியே அனைத்தும் நிகழ்கிறது என்பது பெருமளவில் அச்சத்தைக் கொடுத்தது. அவளின் கை, கால்கள் அனைத்தும் சில்லிட்டது. உடல் முழுவதும் நடுங்கியது. நிற்க இயலாதவளாய், அப்படியே அங்கேயே அமர்ந்து விட்டாள்.
‘இது போன்றும் நடக்குமா?... ஒரு கதையில் நிகழும் நிகழ்வு வாழ்வில் அப்படியே நிகழுமா?.. ஆம்.. மார்கன் ராபர்ட்சன் எழுதிய ஃபுட்டிலிட்டி.. அவர் எழுதி நாலு வருஷத்துக்கு அப்பறம் அந்த கதையில எழுதியிருந்தபடியே நடந்துதுன்னு சொல்வாங்களே!.. ஆனால் அவர் எழுதினது புதினம்ல?.. நான் எழுதுனது சின்னக் கதை தான?.. அதுவும் இன்னும் முழுசா அந்தக் கதையை முடிக்கக் கூட இல்லையே!.. நான் ஒரு கதை எழுதி அந்தக் கதை எல்லாருக்கும் தெரிஞ்சுருந்து அதுக்கப்பறம் கதைல நடக்கிறது போல நடந்தா கூட, நீ செத்ததுக்கப்பறம் ஆச்சும் உன்னை பத்தி பேசிட்டாவது இருப்பாங்க.. இப்ப நான் எழுதின கதைப்படிதான் எல்லாம் நடக்குதுன்னு வெளிய தெரியவும் வாய்ப்பில்லையே!...’
‘எந்த நேரத்துல என் கதைல ஹீரோயினுக்கு என் பேர வச்சேனோ?.. அவளை போலவே நானும் சாகப் போறேன் போல... இப்படி பசும்பொன் முத்துராமலிங்கர் போல நீயும் உன் பொறந்த நாள் அன்னைக்கே சாகப் போறியே!.. மாயா!...’
‘ச்சீ... ச்சீ.. நான் ஏன் இப்படிலாம் யோசிச்சிட்டிருக்கேன்..? என் ஆதி என்னை கொன்னுடுவானா என்ன?.. கதைல நடக்கிற படியே நடக்கணும்னா அவன் என்னை கொல்லணும்.. ஒரு வேளை கொன்னுடுவானோ?.. கொல்றதுக்கு ரீசனும் கதைல வர மாதிரியே சொல்வானோ?.. ச்சீ.. ச்சீ.. சான்சே இல்ல.. இந்த மூஞ்சிக்கு நான் கிடைச்சதே பெருசு.. இதுல காலேஜ் லவ் ஒன்னு தான் குறைச்சலாக்கும்.. ஒரு வேளை இவன் என்னை கொல்வான்-றத கூட நம்பலாம். இவனுக்கு ஒரு காதலி இருந்து அந்த பொண்ணு திரும்ப வரதெல்லாம் நம்பவே முடியாது. நினைச்சு பாத்தா இந்த சிட்சுவேஷன்-லயும் சிரிப்பு தான் வருது’
‘சரி... நாம எதுக்கு வீணா மனச போட்டு குழப்பிக்கிட்டு.. எதையும் யோசிக்காம இப்படியே வெயிட் பண்ணுவோம். அவனே வந்து சொல்லட்டும் எதுன்னாலும்’ என்று எண்ணிய படி இருக்க, ‘அவன் வந்தா தான் உன்னை கொன்னுடுவானே’ என்றொரு எண்ணம் தோன்றி அவளை மீண்டும் குழப்பியது.
‘என் ஆதி போய் அப்படி செய்வானா?.. ஒரு வேளை கொன்னுட்டான்னா?..’ அடிவயிற்றில் பயப்பந்து உருண்டது. ‘ச்ச.. ச்ச.. என் ஆதி என்னை போயி.. நினைக்கவே முடியல்ல.. ஆனா கதைப்படி அவன் உன்னை கொன்னு நீ சாகணுமே!..’
‘அப்பப்பா.. முடியல்ல... என் ஆதி என்னை கொல்ல மாட்டான் தான்.. ஆனாலும் எதுக்கு ரிஸ்க்.. எதாயிருந்தாலும் வெளிய போய் வெயிட் பண்ணி தெரிஞ்சுக்குவோம்’ என்ற முடிவிற்கு வந்தவள், எழுந்து வெளியே செல்ல அடி எடுத்து வைத்தாள்.
அப்போது மேலிருந்து ஒரு வித திரவத்தின் ஓரிரு துளிகள் அவள் மேலே வடிந்தது. திடுக்கிட்டவள் பதட்டத்துடன் மேலே பார்த்தாள்.
திடீரென்று அந்த பகுதி முழுவதும் விளக்குகள் ஒளிர்ந்தன. பட்டாசுகள் வெடித்தன. கையில் ஏந்திய இனிப்பு ரொட்டியுடன் (கேக்) மேலிருந்து கயிற்றைப் பற்றியபடி கீழே இறங்கி வந்தான் அவன்.. அவளவன்..
“ஹேப்பி பெர்த்டே கண்ணம்மா.. சாரி.. சாரி.. உனக்கு தமிழ்-ல வாழ்த்துனா தான் பிடிக்கும்-ல?.. என் அன்பான கண்ணம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா…”
இன்பமாய் அதிர்ந்தாள் அவள். அவனைப் பார்த்து சிரித்தாள். ஆனால் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது.
“டேய்... லூசு... இப்படியா பண்ணுவ.. நிஜமா பயந்துட்டேன்டா” என்றாள்..
அவளைப் பார்த்து சிரித்தபடி கண்ணைச் சிமிட்டியவன், “கண்ணைத் தொட முதல்ல, தண்ணி வேணும்னு யாராச்சும் கேட்டாங்களா?.. குடம் குடமா கொட்டிட்டு இருக்க” என்று கூறியபடியே அவள் கண்களைத் துடைத்து விட்டான்.
“ச்சீ... பே... என்னை தொடாதடா.. பொறுக்கி…” என்றபடி அவன் கைகளைத் தட்டி விட்டாள் மாயா..
“சரி தொடல...” என்றபடி தோளைக் குலுக்கியவன், “வா வந்து கேக் கட் பண்ணு… வாய் நமநமங்குது... வந்து என்னை சாப்பிடு சாப்பிடுன்னு கேக் கூப்பிட்டுட்டே இருக்கு பாரு” என்றான்.
“யாரும் என்கிட்ட பேசத் தேவையில்லை... போ... நான் போறேன்...”
“ஹே..! நில்லுடி.. என்ன ஓவரா பிகு பண்ற?...”
“என்னது?.. நான் பிகு பண்றேனா?.. உனக்கு தான் அறிவேயில்ல.. பெர்த்டே அதுவுமா இப்படியா பண்ணுவ?.. எவ்வளோ பயந்துட்டேன் தெரியுமா?...”
“ஹா.. ஹா..” என்று நன்றாக வாய்விட்டு சிரித்தான் அவன்..
“சிரிக்காதடா... கோவமா வருது எனக்கு...”
“வேற என்ன பண்ண சொல்ற?... நான் தெரியாம தான் கேக்கிறேன்.. ஏன் பயந்த நீ?.. உன்னை கூட்டிட்டு வந்தவன் நானா இருக்கும் போது, என்ன வேணா நடக்கட்டும், என்ன நடந்தாலும் உன் ஆதி இருக்கேன்!.. உன் ஆதி இருப்பேன்னு உனக்குத் தோணவே இல்லல்ல... என் மேல அவ்வளவு நம்பிக்கை உனக்கு..! ம்ம்..? அப்படிதான?.. அதெப்படி நான் உன்னை கொன்னுடுவேனா?.. எப்படிடா இப்படியெல்லாம் யோசிச்ச நீ?.. நியாயமா பாத்தா நீ பண்ண வேலைக்கு நான் தான் கோவப்படணும். ஆனா நீ என்கிட்ட கோச்சிட்டு போற?...”
“நீ எப்போ என் கதைய படிச்ச?...”
“எப்பவோ படிச்சேன்.. இப்ப அதுவா முக்கியம்.. என்ன பிரச்சனை வந்தாலும் உன் ஆதி இருக்கான், உன் ஆதி உனக்கு எந்த பிரச்சனையும் வராம உன்னை பாத்துக்குவான் அப்படின்ற பாதுகாப்பு உணர்வு என்கிட்ட வரலையா உனக்கு?... என் மேல உனக்கிருக்க நம்பிக்கை அவ்வளவு தான்ல?...”
“இல்லடா.. எனக்குத் தெரியும் நீ அப்படியெல்லாம் பண்ண மாட்டனு, ஆனா கதைப்படியே எல்லாம் நடந்துச்சா.. அதான்.. அதுவும் அப்போ தான் ஒரு வேளை கதைப்படியே நடந்துடுமோன்னு நினைச்சு வெளிய போகப் பாத்தேன். நீ வந்துட்ட.. அதுக்கு முன்னாடி வரைக்கும் நீ அப்படிலாம் பண்ண மாட்டன்னு தொண்ணூத்தொன்பது சதவீதம் கான்ஃபிடன்ட்-ஆ தான்டா இருந்தேன். ஒரு சதவீதம் மட்டும் வேணா அந்த நம்பிக்கை இல்லாம போயிருக்கலாம். நான் உன்னை முழுசா நம்பாம போகலை.. நீ என்னை நம்பு.. ப்ளீஸ்...”
“என்னை சமாதானப்படுத்த உனக்கு சொல்லியா குடுக்கணும்.. என்னை தான் நீ ஈசியா சமாளிச்சிடுவியே!...”
“நான் சமாளிக்கலாம் இல்ல... உண்மையத் தான் சொன்னேன்...” என்றாள் அவள்.
“இந்த தோரணைக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல... ஏன்டி நீதான் கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாம கதை எழுதுறீனா அதை படிக்கிற எங்களுக்கும் அறிவில்லன்னு நினைச்சியா?...”
“என் கதையைப் பத்தி பேச மாட்டேன்னு சொன்ன?...”
“சொன்னேன் தான்... ஆனா அதுக்குன்னு லாஜிக்கே இல்லாம கதை எழுதுனா?.. அதை சுட்டிக் காட்டாம இருக்க முடியுமா?.. நீ கேவலமா கதை எழுதுனது கூட பரவாயில்ல, ஆனா அதுல வர மாதிரி நான் பண்ணிடுவேன்னு சந்தேகப்பட்ட பாத்தியா!.. நீயெல்லாம் வேற லெவல்டி...”
சிரித்தாள் அவள்...
“நல்லா சிரிச்சிக்க.. ஆள பாரு...” முறைத்தான் அவன்..
“நீ சொன்ன மாடுலேஷன் எனக்கு சிரிப்பு வந்துடுச்சு.. நான் தான் சொன்னேன்ல 99 பெர்சன்ட் நம்புனேன்னு.. நீ அதை எடுத்துக்காம ஒரு பெர்சன்ட் நம்பாததையே பேசிட்டிருக்க.. நான் உன்னை நம்புனேன்னு சொல்றத நீதான் நம்ப மாட்ற...”
“ஹே!.. அப்படில்லாம் இல்ல.. முழுசா நூறு சதவீதமும் நீ என்னை நம்பிருக்கனுமேன்னு ஒரு சின்ன வருத்தம் அவ்ளோ தான்.. நீ சொல்லி நான் எதை நம்பாம இருந்திருக்கேன்?.. சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டு!.. விடு இந்த டாபிக்கை...”
“சரி விடு.. ஆனா என் கதைல என்னடா லாஜிக் குத்தம் கண்டுபிடிச்ச?.. எவ்வளவு யோசிச்சு எழுதுன கதை தெரியுமா அது?...”
“ஏன்டி தன் மனைவியை கொல்லணும்னா அதை வீட்டிலயே செய்ய வேண்டியதான?.. சிரமப்பட்டு தனியா கூட்டிட்டு வந்து எதுக்கு?.. அவன் தான் அவளை வெளிய அழைச்சிட்டு வந்திருக்கான்... அப்ப கேஸ், இன்வெஸ்டிகேஷன்னு வந்தா மாட்டிக்க மாட்டானா?...”
“ஆமாடா.. லாஜிக்கே இல்லைல?.. நல்ல வேளை நீ முதல்ல படிச்ச.. இனி நான் எழுதுற கதை எல்லாத்தையும் நீதான் முதல்ல படிக்கணும்... படிச்சிட்டு எங்கங்க லாஜிக் மிஸ் ஆகுதுன்னு சொல்லு அங்கல்லாம் சரி பண்ணிடலாம்... என்ன சொல்ற நீ..? சரியா?...”
‘வாய வச்சிக்கிட்டு சும்மா இல்லாம நானா போயி மாட்டிக்கிறேனே!.. ஆதி உனக்கு வாயில சனிடா...’ என்று தனக்குள் பேசிக் கொண்டவன், அவளிடம் “இதைப் பத்தி அப்பறமா பேசிக்கலாம்டா” என்றான்.
“அப்பறம்லாம் இல்ல... நீ இப்பயே சொல்லு.. இதை எப்படி மாத்தலாம்?.. என்றவள், அவன் ஏதோ பேச வருவதற்குள் இல்லல்ல நானே சொல்றேன்.. இது எப்படி இருக்கு பாரு.. லாஜிக் சரியா வருதான்னு பாரு...” என்றபடி கதையைப் பற்றி பேசத் தொடங்கினாள்.
“ஆமாடி... உன்னை இங்க கூட்டிட்டு வந்து, ஆளெல்லாம் செட் பண்ணி, லைட்டிங்ஸ்-லாம் போட்டு, மனுசன் உசுரக் குடுத்து அந்த கயித்தைப் பிடிச்சு இறங்கி வந்து சர்ப்ரைஸ் குடுத்தது உன் கதையைப் பத்தி உட்காந்து விவாதம் பண்றதுக்கா?.. அப்படியே ரெண்டு போட்டேனா பாரேன்...”
“ஈஈஈஈ...” என்று பல்லைக் காட்டியவள், “சாரிடா... எனக்காக ரொம்ப எவ்ஃபர்ட் எடுத்து பண்ணிருக்கல்ல?...” என்றபடி அவனருகில் வந்து கெஞ்சும் விதமாக அவன் கையை சுரண்டியபடி நின்றாள்.
“அது இப்பதான் உன் கண்ணுக்குத் தெரியுதா?.. நான் கோவமா இருக்கேன்பா... என்னை சுரண்டறத நிப்பாட்டு மொத... தள்ளிப் போ...”
“ஹே!.. சாரிடா.. என் செல்ல மாமால்ல.. என் தங்கம்-ல!.. நான் தான் சாரி சொல்றேன்ல?...”
“யாருக்கும் வேணும் உன் சாரி... நீயே வச்சிக்கோ...”
“சரி ஓ.கே.. என் சாரி தான வேணானு சொல்ற?.. என்னை சொல்லலல்ல?...” என்று கூறியபடியே அவனைக் கட்டிக் கொண்டாள்.
தன்னையும் மீறி கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தவன், அவளைத் தானும் கட்டிக் கொண்டான்.
அவனை அணைத்தபடியே நிமிர்ந்து பார்த்தவள், “ஐ லவ் யூ சோ மச்டா மாமா...” என்றாள்..
“லவ் யூ டூடி மை குட்டிச் சாத்தான்…” என்றபடி அவள் நெற்றியில் முட்டியவன், “அப்படியே மாமாக்கு ஒரு கிஸ்” என்றபடியே அவள் இதழ் நோக்கி குனிந்தான். அவளவனின் இதழ் நோக்கித் தானும் முன்னேறிச் சென்றவள், சட்டென யோசனை வந்தவளாய், “டேய்!.. மாமா... நான் ஒன்னு சொல்றேன்!.. அதுல லாஜிக் கரெக்டா இருக்கானு பாரு!...” என்று கூறி கதை சொல்லத் துவங்கினாள்.
“இவளை வச்சிக்கிட்டு..! ஐயோ!...” எனத் தலையில் அடித்துக் கொண்டான் அவன்.



Post Reply

Return to “Kaayaampoo”